தமிழ்நாடு ஒளிப்பதிவு திருத்தச் சட்ட மசோதா 2021 -ஐ திரும்பப்பெற வலியுறுத்தி ஒன்றிய சட்டம் மற்றும் மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிராசாத்துக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்களை குறைக்கும் வகையிலும் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையிலும் உள்ளதால், இந்த வரைவு ஒளிப்பதிவு மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கடந்த ஜூன் 18ஆம் தேதி புதிய ஒளிப்பதிவு திருத்த சட்டத்திற்கான வரைவை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. இந்த சட்டவரைவுக்கு எதிராக இந்தியா முழுவதும் பல்வேறு திரைக்கலைஞர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா, விஷால், கார்த்தி, கவுதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்களும் இந்த ஒளிப்பதிவு திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 


இந்த நிலையில் நேற்றையதினம் நடிகர் கார்த்தி, நடிகை ரோகிணி, 2டி நிறுவனத்தின் ராஜசேகர் உள்ளிட்டோர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இந்த திரைப்பட சட்டம் தொடர்பாக தங்களது கோரிக்கைகளை முன்வைத்து ஆதரவு கேட்டிருந்தனர். 


இந்த நிலையில் மத்திய சட்டம் மற்றும் மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள கடித்தத்தில் 


குறிப்பிட்ட அடிப்படையில் திரைப்பட சான்றிதழ்களை நிராகரிப்பதற்கான வழிமுறைகளை சட்டப்பிரிவு (5)பி பிரிவு 3-இன் கீழ் வழங்கப்பட்ட வழிகாட்டுதல் வடிவத்தில் கிடைக்கிறது. 21ஆம் நூற்றாண்டில் படைப்பு சுதந்திரத்தின் மீது அதிகப்படியான சட்டங்களை சேர்ப்பது அதிகப்படியான ஒன்றாகவே கருதப்படுகிறது. பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றி தயாரிக்கப்பட்ட ஒரு படம் CBFC-இன் பொதுபார்வைக்கு வைக்கப்பட்டு சான்றளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் ஏதேனும் பிரச்னை வந்தால் அது மாநிலத்தின் எல்லைக்குள்தான் வரும். சட்டம் ஒழுங்கு என்பது மாநிலத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது என்பதால் இதனை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் விடவேண்டும். ஆனால் தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டவரைவு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக சென்று  மாநில அரசின் அதிகாரங்களையும், மத்திய அரசிற்கு சொந்தமான திரைப்பட சான்றிதழின் உரிமைகளையும் மீற முயற்சிக்கிறது. 


இந்த சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே CBFC-இக்கு எதிரான திரைப்பட சான்றிதழ் மேல்முறையீட்டு வாரியம் அகற்றப்பட்டுள்ளது. திரைப்படத்துறையின் ஆக்கப்பூர்வமான சிந்தனையை தடுப்பதும், திரைப்படங்கள் எவ்வாறு தயாரிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளை திரைப்படத்துறை மீது சுமத்துவதும் முற்றிலும் நியாமற்றது. உண்மையில் இது நமது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரனது. சுதந்திர சிந்தனைக்கான உரிமையை பறிப்பது ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும், 


1952ஆம் ஆண்டு ஒளிப்பதிவு சட்டத்திற்காக முன்மொழியப்பட்ட திருத்தங்களை திரும்பபெறுவதுடன் CBFC-இன் சுதந்திரத்தை அனுமதிக்கும் போது நாம் முற்போக்கான தேசமாக இருப்போம் என்றும் அப்போதுதான் கலை, கலாச்சாரம், திரைப்பட தயாரிப்பை உள்ளடக்கிய ஆக்கப்பூர்வமான சிந்தனை பயமோ, ஆதரவோ இல்லாமல் மலரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டம் மற்றும் மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு எழுதியுள்ள கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.