தமிழில் அழகி, பள்ளிக்கூடம், சொல்ல மறந்த கதை, ஒன்பது ரூபாய் நோட்டு உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் தங்கர்பச்சான். அதிக படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்துள்ளார். தற்போது பாரதிராஜா, கவுதம் மேனன், யோகிபாபு, அதிதி பாலன் உள்ளிட்டோர் நடிக்க கருமேகங்கள் கலைகின்றன என்ற படத்தை இயக்கியுள்ளார்.


இந்தப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் தங்கர்பச்சான் அளித்துள்ள பேட்டியில், "வெற்றி பெற்ற அழகி படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பீர்களா என்று கேட்கிறார்கள். 2-ம் பாகம், 3-ம் பாகம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை என்றார். கதை கிடைக்காத நிலையில் 2-ம் பாகம் என்று சொல்கின்றனர். என்னால் அதை செய்யமுடியாது” எனத் தெரிவித்தார்.


இந்நிலையில்  சினிமா குறித்து பேசிய அவர், ”பெரிய பட்ஜெட் படங்கள் எடுப்பது தேவையில்லை. கதைதான் முக்கியம் என்றும் தெரிவித்தார். கதை இல்லாமல் அதிக செலவில் புதிய தொழில்நுட்பத்தில் பிரமாண்ட படங்கள் எடுப்பதில் எந்த பலனும் இல்லை. கதை இருந்தால்தான் ரசிகர்களுக்கும், சினிமாவுக்கும் இணைப்பு இருக்கும். முன்பெல்லாம் கதை எழுத அதிகம் பேர் இருந்தனர். ஆனால் இப்போது சினிமாவில் கதை எழுத ஆள் இல்லை'' என்றார்.


மலையாள சினிமாவிற்கு அடுத்தபடியாக தமிழ் சினிமா உச்சத்தில் இருந்தது. ஆனால் சமீப காலமாக தமிழ் சினிமாவை பின்னுக்கு தள்ளும் வகையில் தெலுங்கு இயக்குனர்கள் சிறந்த படங்களை கொடுத்து வருகின்றனர்.  ஒரு படத்தின் கதை, ஸ்கிரீன் பிளே நன்றாக இருக்கும் பட்சத்தில் படம் சிறப்பாக ஓடும் என்பது தான் ரசிகர்களின் கருத்து.  உதாரணத்திற்கு தெலுங்கு இயக்குனரால் எடுக்கப்பட்ட பாகுபலி  உலகம் முழுவதும் நல்ல வசூல் கண்டது. பாகுபலி பாகம்-2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 1200 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.  காதல், காமெடி, செண்டிமெண்ட், ரிவெஞ் என ஒரு திருப்திகரமான பாகமாக இது அமைந்தது.


இதே போன்று தெலுங்கு சினிமாவில் எடுக்கப்பட்ட புஷ்பா ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் போன்றவையும் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது.  தமிழ் சினிமாவில் நல்ல இயக்குனர்கள் இல்லையா என கேள்வி எழலாம். ஆனால் அப்படியும் செல்லிவிட முடியாது.  சங்கர், வெற்றிமாறன், மணி ரத்தினம் உள்ளிட்ட இன்னும் பல சிறந்த இயக்குனர்களை கொண்டது தான் தமிழ் சினிமா.   சிறந்த கதை அம்சம் இல்லாததும், தமிழ் சினிமாவின் தொய்வுக்கு காரணம்.  சமீபத்தில் வெளியான விடுதலை படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்த போதிலும், கதை இயக்கம் ஒளிப்பதிவு உள்ளிட்டவை குறித்து இப்படம் ஏராளமான பாரட்டுகளை பெற்று வருகிறது.  


அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் முதல் இரண்டு நாட்களில் பொன்னியின்செல்வன்1 ஐ காட்டிலும் குறைந்த வசூலையே குவித்துள்ளது. காரணம் கதையில் உள்ள சிறு சிறு தடுமாற்றம்  உள்ளது தான். கதை வலுவாக இருந்திருந்தால் படம் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது தான் ஒரு தரப்பு ரசிகர்களின் கருத்தாக உள்ளது.