தஞ்சாவூரில் மது அருந்தி 2 பேர் உயிரிழந்த விவகாரத்தில், சட்டவிரோதமாக மதுபானம் விற்ற பாருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். 


சீல் வைத்து நடவடிக்கை:


தஞ்சாவூர் மாவட்டம் கீழஅலங்கம் பகுதியில் அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வந்தது. அதற்கு எதிரே உள்ள பாரில் டாஸ்மாக் கடை திறக்கப்படும் நேரத்திற்கு முன்பே, காலை நேரங்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.


அதை வாங்கி பருகிய இரண்டு பேர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து ஆய்வு செய்ய சென்ற வட்டாட்சியர் சிறைபிடிக்கப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பார் உரிமையாளரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து, ஆட்சியர் உத்தரவின்பேரில், சட்டவிரோதமாக மதுபானம் விற்ற பாருக்கு வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் சீல் வைத்தனர்.


நடந்தது என்ன?


கீழஅலங்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்னரே எதிரே உள்ள பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. காலை 11 மணியளவில் விவேக் மற்றும் குப்புசாமி ஆகியோர், அந்த மதுவை வாங்கிக் குடித்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் மயங்கி விழுந்த குப்புசாமி, சிகிச்சை பலனின்றி முதலில் உயிரிழந்துள்ளார். அதைதொடர்ந்து,  விவேக் என்ற 36 வயது நபரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


சமீபத்தில் விஷச்சாராயம் குடித்த 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த பதற்றமே இன்னும் முழுமையாக தனியாத நிலையில், அரசு மதுபானக் கடைகளில் கள்ளச் சந்தையில் மதுவை வாங்கிக் குடித்த இருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான், சட்டவிரோதமாக மதுபானம் விற்ற பாருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.


அமைச்சர் பதவி விலக கோரிக்கை:


இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில், மதுக்கடை திறப்பதற்கு முன்னரே, கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட மது வாங்கிக் குடித்த குப்புசாமி என்ற முதியவர் மரணமடைந்துள்ளார். மற்றொருவர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் மரணித்துவிட்டார் என்ற செய்தி வந்துள்ளது. கள்ளச் சாராயத்தைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் போலி மதுபானங்களால் மரணங்கள் தொடர்கின்றன.


இந்த போலி மதுபானத்தை உற்பத்தி செய்த ஆலையின் உரிமையாளர், டாஸ்மாக் நிர்வாகத்தினர் மற்றும் இந்தத் துறையின் அமைச்சரான செந்தில் பாலாஜி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் உள்ள மதுக் கடையின் முன்பு பாஜக தொண்டர்களுடன் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஜெய் சதீஷ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதே கோரிக்கையை முன்வைத்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பு போராட்டம் நடைபெற வேண்டுமா? என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் தான் முடிவு செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாது, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று தமிழக சார்பாக வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.