தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த அண்ணாதுரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "எங்கள் குடும்பத்தினர் தொடர்ச்சியாக விவசாயம் செய்து வருகின்றோம். இந்த கிராமத்தை சேர்ந்த பெரும்பாலானவர்கள் விவசாயத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளனர். நடிவிக்கோட்டை கிராமத்தில் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் இல்லாத காரணத்தால் மிகுந்த சிரமங்களுக்கு இடையே 50 ஆயிரம் நெல் மூட்டைகளை கடந்த ஆண்டு விற்பனை செய்தேன். புதுக்கோட்டை நடிவிக்கோட்டை கிராமத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையத்தை அமைக்க கோரி அதிகாரிகளும் பல ஆண்டுகளாக முறையிட்டு வருகிறோம். இந்த கிராமத்திலேயே 0.7 ஹெக்டேர் பரப்பளவில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.


அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையிலும், இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டுவதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. 2021 ஆம் ஆண்டு தற்காலிகமாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை நிரந்தர நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால் இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் விளைந்த நெல்லை விற்பனை செய்வதிலும், அதனை பாதுகாப்பதிலும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே புதுக்கோட்டை நடிவிக்கோட்டை கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் நிரந்தர நேரடி கொள்முதல் நிலையத்தை அமைக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.


 இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "இரண்டு மாதங்களில் நடிவிக்கோட்டை கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி நடிவிக்கோட்டை கிராமத்தில் இரண்டு மாதங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையத்தை அமைக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.




கொடைக்கானல் டால்பின் நோஸ் சுற்றுலாத்தலத்திற்கு வட்டக்கானலிலிருந்து வனப்பகுதி வழியாக சாலை அமைக்க தடை கோரிய வழக்கு - வனத்துறை செயலாளர் பதில் தர உத்தரவு 


தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த பாண்டி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், " 2013 செப்டம்பர் 20ஆம் தேதி கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயமாக  அறிவித்து, அரசு அரசாணையை வெளியிட்டது. கொடைக்கானல் வன விலங்கு சரணாலயத்தில் 44 வகையான பாலூட்டிகள், 150 அரிய  பறவையினங்கள்,  202 பட்டாம்பூச்சி வகைகள், பல வகையான புல்வகைகள், தூய்மையான நீர் நிலைகள் என சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான சூழல் உள்ளது. இயற்கையை பாதுகாக்கும் விதமாக கொடைக்கானல் டால்பின் நோஸ் சுற்றுலாதலத்தை அடைய நான்கு வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வருவாய்த்துறை அலுவலர்கள் மார்ச் 2ம் தேதி ஆய்வு செய்து வட்டக்கானல் பகுதி வழியாக டால்பின் நோஸ் சுற்றுலாத்தலத்தை அடைய வனப்பகுதி வழியாக  சாலை அமைக்க முடிவு செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள வன உயிரினங்கள் பாதிக்கப்படும். இப்பகுதியில் சாலை அமைக்க தேசிய வனவிலங்கு வாரியத்திடம் முறையான அனுமதி பெறப்படவேண்டும். ஆனால் அது போல எவ்விதமான அனுமதியும் பெறப்படவில்லை. வட்டக்கானல் வழியாக வனப்பகுதிக்குள் டால்பின் நோஸ் சுற்றுலாத்தலத்தை அடைய சாலை அமைத்தால் ஏராளமான மரங்கள் அழிக்கப்படுவதோடு அரிய வனவிலங்குகளும், வன உயிரினங்களும் அழியும் நிலை உருவாகும்.  அது இப்பகுதியின் இயற்கை சமநிலையை பாதிக்கும். ஆகவே கொடைக்கானல் டால்பின் நோஸ் சுற்றுலாதலத்திற்கு வட்டக்கானலிலிருந்து வனப்பகுதி வழியாக சாலை அமைக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு இதுதொடர்பாக தமிழக வனத்துறை செயலர், தமிழக தலைமை வனப் பாதுகாவலர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், திண்டுக்கல் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.