தமிழ்நாட்டு மண்ணில் முதலமைச்சர் ஸ்டாலின் தீவிரவாதத்தை அனுமதிக்க மாட்டார் என்றும், கார் வெடிப்பு விபத்து சம்பவத்தைப் பொருத்தவரை என்.ஐ.ஏ. அலுவலர்கள், IB புலனாய்வு முகமை அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு விசாரணையில் அவர்களும் பங்குபெற்றிருக்கிறார்கள் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடியில் நிருபர்களைச் சந்தித்த தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணை பற்றி தெரிவித்ததாவது:


என்ஐஏ, ஐபி அலுவலர்களுடன் இணைந்து விசாரணை


தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து என்.ஐ.ஏ. அலுவலர்களும் விசாரணை நடத்தியுள்ளனர். இதுபோன்ற கார் வெடிப்பு சம்பவம் நடந்தால் அதை முதலில் தமிழ்நாடு காவல்துறை எப்.ஐ.ஆர். போட்டு விசாரணை நடத்த வேண்டும். அதுதான் கோவை சம்பவத்திலும் நடந்தது.


 வேறு மாநிலம், வேறு நாட்டுடன் பயங்கரவாத தொடர்பு இருந்தால் என்.ஐ.ஏ. தாங்களாகவே அந்த வழக்கை நேரடியாக விசாரிக்க முடியும். கடந்த 25ஆம் தேதி முதல் என்.ஐ.ஏ. அலுவலர்களும் விசாரணையில் இணைந்திருந்தனர்.


அனைத்து சம்பவங்கள் குறித்தும் நம் மத்திய உளவுத்துறையான IB (Intelligence Bureau) புலனாய்வு முகமைக்கும், தேசியப் புலனாய்வு முகமைக்கும் தொடர்ந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வந்துள்ளன. இங்கே இந்த கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் ஏற்கெனவே என்.ஐ.ஏ.வால் விசாரிக்கப்பட்டிருக்கக் கூடியவர். விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டவர் அதன்பின் ஏன் விடுவிக்கப்பட்டார் ? என்பது குறித்து எங்களுக்குத் தெரியாது. அதுபற்றிய விவரங்கள் எங்களிடம் இல்லை.


’மாயத்தோற்றத்தை உருவாக்குகிறார்கள்’


அப்போது விசாரணை மேற்கொண்ட என்.ஐ.ஏ. அலுவலர்களுக்கு தான் அது தெரியும். எனவே இந்த விஷயத்தில்  23ஆம் தேதி காலை முதல் 26ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசின் காவல்துறையும், என்ஐஏவும் இணைந்தே தான் விசாரணையில் ஈடுபட்டது.


எனவே அவர்களை விடுத்துவிட்டு தமிழ்நாடு அரசின் காவல் துறை மட்டு விசாரணையில் ஈடுபட்டது போல் மாயத்தோற்றத்தை உருவாக்க முயற்சிப்பது சரியல்ல.


முதலமைச்சர் ஸ்டாலின் சம்பவம் நடந்த அதிகாலை முதல் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தன் நேரடி கண்காணிப்பில் அறிவுரை வழங்கி விசாரணை சரியான கோணத்தில் செல்ல வேண்டும் என முடுக்கிவிட்டதோடு, தீபாவளி அன்று பதட்டமான மனநிலை வந்துவிடாமல் இயல்பான நிலையில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் வைத்திருக்க நடவடிக்க எடுத்துள்ளார்.


அவருடைய சீரிய வழிகாட்டுதலின்கீழ் இயங்கக்கூடிய காவல் துறை இந்த விஷயத்தை மிகத் திறமையாகக் கையாண்டு தமிழ்நாடு காவல் துறை  புலனாய்வில் ஈடுபட்டுள்ளது. இந்திய அளவில் டெல்லி கோர்ட் காம்ப்ளக்ஸில் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி வெடிப்பு சம்பவம் நடந்தது. ஆனால் என்.ஐ.ஏ. முதல் தகவல் அறிக்கையை ஜனவரி 13, 2022இல் தான் அளித்தது.


முந்தைய வழக்குகளும் என்ஐஏ அறிக்கையும்


அதேபோல் மேற்கு வங்கம், கெஜூரியில் 2022ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. ஆனால் ஜனவரி 25ஆம் தேதி தான் என்ஐஏ முதல் தகவல் அறிக்கை அளித்தது.


அதேபோல் மேற்கு வங்கம் நைஹாத்தியில் ஜனவரி 27ஆம் தேதி குண்டுவெடிப்பு நிகழ்ந்த நிலையில், பிப்ரவரி 2ஆம் தேதி எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதற்கு முன் நிகழ்ந்த வெடி விபத்துகளில்,  என்ஐ ஏவின் முதல் தகவல் அறிக்கைக்கு போகக் கூடிய கால அளவு ஒரு வாரம் முதல் மூன்று நான்கு மாதங்கள் வரை ஆகும். 


இந்த கார் வெடிப்பு விபத்து சம்பவத்தைப் பொறுத்தவரை என்ஐஏ அலுவலர்கள், IB புலனாய்வு முகமை அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு விசாரணையில் அவர்களும் பங்குபெற்றிருக்கிறார்கள். முழு தரவுகளும் முதலமைச்சரின் மேற்பார்வையில் திரட்டி நான்கு நாள்களுக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டிலே எந்தக் காலத்திலும் எந்த சூழலிலும் எந்த ஒரு தீவிரவாத, பயங்கரவாத நடவடிக்கைக்கும் முதலமைச்சர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டு மண்ணில் தீவிரவாத செயலுக்கு அனுமதி இல்லை. முதலமைச்சர் ஸ்டாலின் அதில் மிக உறுதியாக இருக்கிறார்." இவ்வாறு அவர் கூறினார்.