சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற அவசர கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். இதன்பின்னர் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஒருவர் பின் ஒருவராக தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர். அப்போது, அ.தி.மு.க. மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி பேசுகையில், சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்ய நங்கவள்ளி மற்றும் மேட்டூர் தொட்டில்பட்டி தனிகுடிநீர் திட்டம் ஆகிய இரு குடிநீர் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 



இந்த திட்டத்திற்கு 693 கோடி மதிப்பீட்டில் உத்தேசபட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் மத்திய அரசின் பங்கீடு 32 சதவீதம், மாநில அரசின் பங்கீடு 10 சதவீதம் மற்றும் மீதமுள்ள 416 கோடி பொதுநிதி அல்லது குடிநீர் நிதியிலிருந்து வசூலிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு தனியார் பங்களிப்புடன் மக்களிடம் வரி சுமத்தப்படலாம் இதனை ஆரம்பகட்டத்தில் இருந்து எதிர்த்து வருவதாக பேசினார். இந்த திட்டத்திற்கு ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்தத் திட்டம் சாத்தியமற்ற ஒன்று ஏற்கனவே உள்ள தனிக் குடிநீர் திட்டத்தை முறையாக செயல்படுத்தினாலே போதுமானதாக இருக்கும் என்று பேசினார். இதுதவிர சேலம் அண்ணா பூங்கா ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று திறக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் நிறுவனங்கள் வசூல் செய்கிறது. ஒப்பந்தம் கூறாமல் வசூலிப்பது தவறு என்றார்.



இதற்குப் பின்னர் யாதவமூர்த்தி மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் தனிகுடிநீர் திட்டங்களை கண்டித்து, மேயர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் கோஷம் எழுப்பினர். இதனையடுத்து சில திமுக கவுன்சிலர்கள் அங்கு வந்து யாதவமூர்த்தி மற்றும் அதிமுக கவுன்சிலர்களை பிடித்து வெளியே இழுத்துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக கவுன்சிலர்களை வெளியே சென்று கண்டனம் தெரிவிக்கும்படி தி.மு.க. கவுன்சிலர்கள் வெளியேற்றினர். 


இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சேலம் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி கூறுகையில், "நேற்று இரவு 10 மணிக்கு மாமன்ற அவசர கூட்டம் நடைபெறும் என அழைப்பு விடுத்தனர். அதோடு 40 பக்கம் தீர்மான நகலையும் அனுப்பி வைத்தனர். முழுமையாக இதை படிப்பதற்கு கூட நேரம் கொடுக்கப்படாத நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. குடிநீர் வினியோகம் செய்ய நங்கவள்ளி மற்றும் மேட்டூர் தொட்டில்பட்டி தனிகுடிநீர் திட்டம் ஆகிய இரு குடிநீர் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த திட்டத்திற்கு 693 கோடி மதிப்பீட்டில் உத்தேசபட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் மத்திய அரசின் பங்கீடு 32 சதவீதம், மாநில அரசின் பங்கீடு 10 சதவீதம் மற்றும் மீதமுள்ள 416 கோடி பொதுநிதி அல்லது குடிநீர் நிதியிலிருந்து வசூலிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், அண்ணா பூங்கா ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று திறக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் நிறுவனங்கள் வசூல் செய்கிறது என்று குற்றம் சாட்டினர். ஒப்பந்தம் கூறாமல் வசூலிப்பது தவறு" என்று கூறினார்.


பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதன் பிறகு கூட்டம் அமைதியாக நடைபெற்று முடிந்தது.