தைப்பூசம் ஆண்டுதோறும் தமிழ்ப்பஞ்சாங்கப்படி தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது.
தைப்பூசம் விழாவானது பழங்காலம் தொட்டே தமிழகத்தின் முருகன், சிவன் கோயில்களில் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசம் கொண்டாடப்பட்டது குறித்து தேவாரப் பதிகங்களில் குறிப்பிட்டுள்ளன. குறிப்பாக ”பொருந்திய தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த” என்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். பிற்கால சோழர் ஆட்சியில் தைபூசத்தன்று கோயில்களில் கூத்துக்களும் நடத்தபட்டன. குறிப்பாக திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலில் தைப்பூசதை ஒட்டி நான்கு நாட்கள் கூத்துகள் நடத்ததாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
பழனி முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் ஒரு மலைக் கோவிலாகும். மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகர் மூலவர் சிலையை நவபாஷாணத்தால் செய்து நிறுவியுள்ளார். இக்கோவிலில் தைப்பூசம் பத்து நாட்கள் நடைபெறும் முக்கிய விழாவாகும். ஏழாம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெறும். முருகன் தன் இரு துணைவியரான வள்ளி மற்றும் தெய்வயானையுடன் திருமணக்கோலத்தில் ரதவீதிகளில் தேரில் பவனி வருகிறார். பத்தாம் நாள் தெப்போற்சவம் நடைபெறுகிறது. தைப்பூசத்தன்று மக்கள் பழனியில் குவிவது வாடிக்கை. பக்தர்கள் பல பகுதிகளிலிருந்து பாத யாத்திரையாக பழனிக்கு வருகிறார்கள். நேர்த்திக் கடனாக முருகனுக்கு காவடி எடுக்கிறார்கள்.
கடந்த 12ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று மாலை நடைபெற்ற நிலையில் ஏழாம் நாள் திருவிழாவான இன்று தைப்பூசத் தேரோட்டம் நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக பழனி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா பக்தர்கள் கூட்டமின்றி இன்று நடைபெற்று வருகிறது.
அதேபோல இன்று மாலை நான்கு ரதவீதிகளிலும் நடைபெறும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு, கோவில் வளாகத்திற்கு உள்ளேயே சாமி ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்த நிலையில் பழனி அடிவாரத்தில் அதிகளவிலான பக்தர்கள் குவிந்துள்ளனர். பழனி வந்த பக்தர்கள் அனைவரும் பழனி அடிவாரம் பாத விநாயகர் கோவிலில் நின்று சுவாமியை வழிபட்டு ஊர் திரும்பி செல்கின்றனர்.