உலகம் முழுவதும் சுற்றுச்சூழலுக்கு ஆதரவான குரல்கள் அதிகம் ஒலிக்கத் தொடங்கியுள்ள நிலையில், எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பு சத்தமில்லாமல் தொடங்கி நடந்து வருகிறது. பிரபலத் தொழிலபதிபர் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்புக்குப் பேர் போனது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட டெஸ்லா நிறுவனம், இந்தியாவின் எலக்ட்ரிக் கார்கள் சந்தையைக் கைப்பற்ற 2019 முதலே முயன்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, Tesla Motors India & Energy Pvt Ltd என்ற பெயரைக் கடந்த ஜனவரி மாதம் பெங்களூருவில் பதிவு செய்தது. நிறுவனத்துக்காக 3 இயக்குநர்களும் நியமிக்கப்பட்டனர். அங்கேயே டெஸ்லா நிறுவனத்தின் ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணிக்கான அலுவலகம் அமைக்கப்பட்டது.
எனினும் இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தொடங்கப்பட்டு விட்டதாக எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதுதொடர்பாக அண்மையில் ட்விட்டராட்டி ஒருவர் கேட்ட கேள்விக்கு, இந்தியாவில் விதிக்கப்படும் வரிகள் அதிகமாக இருப்பதாகவும் மத்திய அரசுடன் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருவதாகவும், எலான் மஸ்க் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து தெலங்கானா மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர், தங்கள் நிலத்தில் டெஸ்லா தொழிற்சாலை அமைக்க முழு ஒத்துழைப்பு தருவதாக அழைப்பு விடுத்தார். தொடர்ந்து மகாராஷ்டிர அமைச்சரும் டெஸ்லாவுக்கு அழைப்பு விடுத்தார். இதற்கிடையே திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தமிழ்நாட்டில் வந்து தொழில் தொடங்குமாறு டெஸ்லா நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்திய கார் சந்தை
இந்திய சந்தையில் மாருதி, ஹூண்டாய் ஆகிய இரு நிறுவனங்கள் சுமார் 70% கார்களை விற்பனை செய்து வருகின்றன. டாட்டா, மகேந்திரா நிசான் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் மீத கார்களை விற்பனை செய்து வருகின்றன. இதில் சொகுசு கார்களின் விற்பனை குறைவாக உள்ளது.
இந்தியாவில் பென்ஸ், ஆடி, ரோல்ஸ்ராய்ஸ் உள்ளிட்ட சொகுசு கார்கள் ஆண்டுக்கு சுமார் 12 ஆயிரம் அளவுக்கே விற்பனை ஆகின்றன. 2021-ல் மெர்சிடிஸ் பென்ஸ் 11,242 கார்களும், ரோல்ஸ்ராய்ஸ் 25- 30 கார்களும் விற்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.
டெஸ்லா தொழில் தொடங்குவதில் என்ன தடை?
இந்தியாவில் பொதுவாக 40 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.30 லட்சம்) வரையிலான கார்களுக்கு, காரின் விலையில் 60 சதவீத இறக்குமதி வரியும், 40 ஆயிரம் டாலர்களுக்கும் அதிகமான விலை கொண்ட கார்களுக்கு 100 சதவீத வரியும் விதிக்கப்பட்டு வருகிறது.
டெஸ்லா நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்கள், 40 ஆயிரம் டாலர்களுக்கும் அதிகமான விலை கொண்டவை என்ற சூழலில், 100 சதவீதம் வரி விதிக்கப்படும். இதனால் காரின் விலை உண்மையான விலையைக் காட்டிலும் இரட்டிப்பாக இருக்கும். இந்த சூழலில் தங்களுடைய சூழலுக்கு ஏற்ற எலக்ட்ரிக் கார்கள் என்பதால், வரி விதிப்பை அரசு குறைத்து, நிலையாக 40% வரிவிதிப்பை மட்டுமே அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இதை ஏற்க மத்திய அரசு தயக்கம் காட்டி வருகிறது.
ஓலா எதிர்ப்பு
இந்த சூழலில், ஏராளமான இந்திய நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. ஓலா எலக்ட்ரிக் கார்கள் 2023-ல் தயாராகிவிடும் என்று அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இறக்குமதி வரியைக் குறைத்தால் எலக்ட்ரிக் வாகனங்களின் சந்தை வளரும் என்று டெஸ்லா, ஹூண்டாய் நிறுவனங்கள் கருத்துத் தெரிவித்திருந்தன. இதற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த ஓலா தலைமைச் செயல் அதிகாரி பவிஷ் அகர்வால், வெளிநாட்டு கார்களை இந்தியாவின் குறைந்த வரியில் அனுமதித்தால் அது சரியல்ல. வெறுமனே இறக்குமதி செய்யாமல், உள்நாட்டிலேயே எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் திறன் இருப்பதை நம்புவோம் என்று பதிவிட்டிருந்தார்.
இந்தப் பின்னணியில், எலான் மஸ்க்கின் டெஸ்லா இந்தியா வருமா, மாநில அரசுகள் அழைப்பு விடுப்பது குறித்து பிரபல ஆட்டோமொபைல் நிபுணர் டி.முரளி 'ஏபிபி நாடு' செய்தி நிறுவனத்திடம் பேசினார். ''இப்போதைய சூழலில், அரசு டெஸ்லா நிறுவனத்துக்கான வரியைக் குறைக்க வாய்ப்பில்லை. ஏனெனில் உள்நாட்டு நிறுவனங்களின் அதிருப்தியைச் சம்பாதிக்க அரசு விரும்பாது.
எலக்ட்ரிக் வாகனங்களை மின்னணுமயமாக்க வேண்டும் என்று நீண்ட நாளாகவே மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அதற்கான திட்டங்கள் சிலவற்றையும் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக உள்நாட்டு வாகன நிறுவனங்களிடமும் பேசி வருகிறது.
டெஸ்லாவுக்கு இந்தியா தேவை
பொதுவாக ஒரு நாட்டில் 1000 பேருக்கு இத்தனை பேர் கார்களைப் பயன்படுத்துகின்றனர் என்ற கணக்கில், கார் நிறுவனங்கள் தங்களின் தயாரிப்பை மேற்கொள்கின்றன. இது 25 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் 1000-க்கு 600, மலேசியாவில் 1000-க்கு 400, இந்தியாவில் 1000-க்கு 11 பேர் என்ற கணக்கில் இருந்தது. தற்போது இந்தியாவில், 1000-க்கு சுமார் 50 பேர் கார்களைப் பயன்படுத்தி வருகின்றனர். 139 கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ள நமக்கு, எவ்வளவு கார்கள் தேவைப்படும்?
இதற்காகவே கார் நிறுவனங்கள் போட்டி போட்டு இந்தியாவில் விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. குறைந்த செலவில், அதிகத் திறன்களையும் வளங்களையும் பயன்படுத்திக்கொண்டு லாபம் சம்பாதிக்க வெளிநாட்டு நிறுவனங்கள் நினைக்கின்றன. இதற்காக வரிக்குறைப்பையும் அரசிடம் கேட்கின்றன.
பெட்ரோல், டீசல் கார்களுடன் ஒப்பிடும்போது, எலக்ட்ரிக் கார்களுக்கான உபகரணங்களின் தேவை குறைவு. உதாரணத்துக்கு பெட்ரோல் கார்களில் சிறிதும் பெரிதுமாக சுமார் 28 ஆயிரம் உபகரணங்கள் இருந்தால், எலக்ட்ரிக் கார்களில் ஆயிரத்துக்கும் குறைவான உபகரணங்களே இருக்கும். முந்தைய கார்களில் 300-க்கும் மேற்பட்ட சப்ளையர்கள் இருக்கும் சூழலில், எலக்ட்ரிக் கார்களில் 40 சப்ளையர்களுக்கு மட்டுமே வேலை இருக்கும்.
எலான் மஸ்க் என்ன செய்வார்?
தொழில் செய்வோரின் தொலைநோக்குப் பார்வையை எளிதில் கணித்துவிட முடியாது. இந்தியா போன்ற மாபெரும் மக்கள்தொகை கொண்ட நாட்டில், அடிப்படையைச் சரியாகக் கட்டமைத்துவிட்டால் பின்னாட்களில் லாபம் பார்த்துக்கொள்ளலாம் என்றும் நினைக்கலாம். அல்லது வரிக்குறைப்பு அமலாகும்வரை வராமல் இருக்கவும் யோசிக்கலாம்.
எலக்ட்ரிக் கார்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் 100 சதவீதம் இருப்பதாகக் கூறுவது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை. எலக்ட்ரிக் கார்கள், தங்களின் வாழ்க்கைச் சுழற்சியில், அதிகளவு CO2 வெளியிடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
தமிழகத்துக்கு டெஸ்லா வருமா?
தமிழக அரசு அரசியல் காரணங்களுக்காகவும் மாநிலத்துக்குப் பெருமை சேர்க்கவும் டெஸ்லாவுக்கு அழைப்பு விடுத்திருக்கலாம். இங்கு டெஸ்லா கார் நிறுவனம் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஏனெனில் இங்கு தேவையான சப்ளையர்கள், போதிய அளவில் உள்ளனர். இந்தியாவிலேயே முதன்முதலில் கார் பாகங்கள் உற்பத்தியாளர்கள் (auto component manufacturers) வந்தது சென்னையில்தான். அதேபோல இன்ஜின் சம்பந்தப்பட்ட கார் பாக உற்பத்தியும் இங்குதான் முதலில் தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கான இதமான தட்பவெப்பநிலை, கட்டமைப்பு வசதிகள், திறமையான பொறியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் இருக்கின்றனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் தூத்துக்குடி, எண்ணூர், சென்னை ஆகிய 3 பெரிய துறைமுகங்கள் இருக்கின்றன. பிஎம்டபிள்யூ, ஃபோர்ட், ஹூண்டாய், யமஹா உள்ளிட்ட 11 சர்வதேச கார் வகைகள் சென்னையிலேயே தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் டெஸ்லாவும் தமிழகத்தில் கால் பதிக்க வாய்ப்புண்டு'' என்று முரளி தெரிவித்தார்.