குடியரசு தின விழாவில் அணிவகுப்பு ஊர்திகள் பங்கேற்கும் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பதில் கடிதம் எழுதியுள்ளார். 


அந்த கடிதத்தில், “குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதற்கான ஊர்திகளை தேர்ந்தெடுப்பதற்கு நிபுணர் குழு நிறுவப்பட்டுள்ளது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.  குடியரசுத் தின விழாவில் பங்கேற்கும் அணிவகுப்பு ஊர்திகள் பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகே நிபுணர் குழு முடிவு செய்கிறது. இந்த ஆண்டு தமிழ்நாடு உட்பட 29 மாநிலங்களில் இருந்து அலங்கார ஊர்திகள் முன்வடிவு பெறப்பட்டது. 




முதல் 3 சுற்றுகளில் தமிழ்நாடு ஊர்திகள் பரிசீலிக்கப்பட்டது. அடுத்தடுத்த சுற்றுகளில் உள்ள விதிகளின்படி தமிழ்நாடு ஊர்திகளை இந்த முறை ஏற்கமுடியவில்லை. கடந்த 2017, 19, 20,21 ஆம் ஆண்டுகளில் தமிழக ஊர்திகள் குடியரசுத் தின விழாவில் இடம்பெற்றதை நினைவூட்ட விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 


முன்னதாக, ஆண்டுதோறும் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் முப்படைகளின் அணிவகுப்பு, பல்வேறு மாநில அணிவகுப்பு ஊர்திகள் நடைபெறும். தமிழக அரசு சார்பில் வேலு நாச்சியார், வ.உ.சி உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை சித்தரிக்கும் வகையில் அலங்கார ஊர்திக்கான கருத்துரு வழங்கப்பட்டிருந்தது.   இந்த நிலையில், நடப்பாண்டிற்கான குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இதுதொடர்பாக, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


முதல்வர் எழுதிய கடிதத்தில், குடியரசு தின அணிவகுப்பில் விடுதலை போராட்ட வீரர்களின் உருவகங்கள் அடங்கிய தமிழ்நாட்டின் ஊர்தி மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். 


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண