தென்காசி மாவட்டத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி ஒண்டிவீரன் வீர வணக்க நாள் நிகழ்ச்சி மற்றும் செப்டெம்பர் 1ஆம் தேதி மாவீரன் பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சி ஆகியவை கொண்டாடப்பட உள்ளன.
இந்நிலையில், நாளை (ஆக.19) காலை 6 மணி தொடங்கி செப்டெம்பர் 2ஆம் தேதி மாலை 6 மணி வரை 15 நாள்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து அம்மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முன்னதாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், பச்சேரி கிராமத்தில் 20.08.2022 அன்று நடைபெறவுள்ள ஒண்டிவீரன் அவர்களின் 251ஆவது வீரவணக்க நாள் நிகழச்சி மற்றும் 01.09.2022 அன்று நெற்கட்டும்செவல் கிராமத்தில் நடைபெறும் மாவீரன் பூலித்தேவன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி ஆகிய நிகழ்ச்சியில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்த வருகைதரும் தென்காசி மாவட்ட மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து கலந்துகொள்ளவுள்ள பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளைச் சார்ந்தவர்கள், கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக தென்காசி மாவட்டம் முழுமைக்கும் 19.08 2022 அன்று காலை 06.00 மணி முதல் 02.09.2022 அன்று மாலை 06.00 மணி வரை குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144 (1) மற்றும் (2) தடையுத்தரவு அமலில் இருக்கும்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் கூட்டமாக செல்லாமல் சமூக இடைவெளியுடன் நான்கு நபர்கள் வீதம் சென்று மரியாதை செலுத்திட முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் தற்போது குற்றால சீசன் காரணமாகவும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் நீர் கொட்டியபடியும், பருவ மழை காரணமாக சாரல் மழை பொழிந்தபடியும் உள்ள நிலையில் இம்மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் படை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.