காவல் அதிகாரி ஒருவரை ஆந்திர முதலமைச்சரின் தங்கை, ஒய்.எஸ். ஷர்மிளா நடுரோட்டில் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பலரும் அவருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.


ஒய்.எஸ். ஷர்மிளாவை தடுத்த காவல்துறை:


தெலங்கானா அரசு அரசு நடத்திய அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படுகிறது. இது தெலங்கானா மாநிலத்தில் பெரும் சர்சையாக மாறியுள்ளது. இந்நிலையில், இந்த குற்றச்சாட்டை விசாரிக்கும், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அலுவலத்தை, ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவரும், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா முற்றுகையிட முயன்றார். காரில் சென்ற அவரை காவலர்கள் மறித்து தடுத்து நிறுத்தினர். 






காவல் அதிகாரியை அறைந்த ஷர்மிளா:


அப்போது காரில் இருந்து இறங்கிய ஷர்மிளா ஆவேசமாக நடந்து வந்து, மறுபக்கத்தில் காரின் ஓட்டுனரை வெளியே இழுத்து தள்ளிய காவல் அதிகாரியை கன்னத்திலேயே அறைந்து தூரமாக தள்ளியுள்ளார். இதனால் கோவமான காவல் அதிகாரி என்னை ஏன் அறைந்தீர்கள் என கேள்வி எழுப்ப, என்னை ஏன் அடித்தீர்கள் என கேட்டு ஷர்மிளா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு வந்த காவல் அதிகாரிகள் அவரை அங்கிருந்து அழைத்து சென்று தடுப்பு காவலில் வைத்துள்ளனர். இதனிடையே, ஷர்மிளா காவல் அதிகாரியை அடித்தது முழுமையாக பதிவான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதோடு, பணியை செய்த காவல் அதிகாரியை அறைந்த ஷர்மிளா மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


வினாத்தாள் கசிந்த விவகாரம்:


தெலுங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும்  தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் கசிந்ததாகக் கூறி அங்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. இதுதொடர்பாக தற்போது 11 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  அரசுப்ப்ணிகளுக்கான  மூன்று தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தெலங்கானா அரசியலில் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள முயன்று வரும் ஷர்மிளா, இந்த வினாத்தாள் கசிந்த விவகாரத்தை தீவிரமாக பேசி வருகிறார். முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகிறார். இதுதொடர்பாக ஐதராபாத்தில் கடந்த மாதம் நடைபெற்ற போராட்டத்தில் ஷர்மிளா கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.