நேற்று சென்னையில் பிரபல தனியார் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து அந்தப் பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியர் ராஜ்கோபால் என்பவரை தற்காலிக இடைநீக்கம் செய்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.தமிழகத்தில் பள்ளி மாணவிகள் மீது ஆசிரியர்கள் பாலியல் வன்மம் கொள்ளும் நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அவ்வாறு நடந்த சில குற்றச் சம்பவங்களையும், அதில் கைதான ஆசிரியர்களையும் பார்க்கலாம்.
கடந்த ஆண்டு முதல் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் அனைத்து செயல்படவில்லை. இதனால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலிலும் கடந்த ஆண்டு இரண்டு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் கார்த்திக்(26) என்ற ஆசிரியர் பள்ளி மாணவர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார். 9 வகுப்பு மாணவரை தனது வீட்டிற்கு அழைத்து பாடம் சொல்லி தருவதாக கூறி பாலியல் ரிதியில் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் செங்கல்பட்டு காவல்துறை அவரை கைது செய்தது.
2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையின் துடியலூர் பகுதியில் அனைத்து மகளிர் காவல்துறையினர் 50 வயது மதிக்கதக்க ஆசிரியரை கைது செய்தனர். அவர் ஒரு பள்ளியில் 6 வகுப்பிற்கு ஆசிரியராக இருந்து வந்துள்ளார். அப்போது 6 வகுப்பு மற்றும் 7 வகுப்பு மாணவிகளிடம் தவறாக நடக்க முற்பட்டுள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் பள்ளி நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. அதன்பின்னர் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த ஆசிரியரை கைது செய்து போக்சோ சட்டம் உட்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதேபோல் 2019ஆம் ஆண்டு கோவையில் 42 வயதான சங்கர் சுப்ரமணியம் என்பவர் ஒரு பள்ளியில் மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி அளித்து வந்துள்ளார். அப்போது அங்கு பயின்ற மாணவி ஒருவருக்கு இவர் பாலியல் சிண்டல் செய்தாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அம்மாணவி மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் புகார் அளித்துள்ளார். அதன் பெயரில் விசாரிக்கப்பட்டு சங்கர் சுப்ரமணியத்தை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை ஆரணி மாவட்டத்திலும் 2019ஆம் ஆண்டு நித்யா(30) என்ற ஆசிரியை பாலியல் குற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். இவருடைய கணவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு புகாரை அளித்துள்ளார். அதில், இந்த ஆசிரியையின் மொபைல் போனில் பல மாணவர்களுடன் தவறாக இருந்த படங்கள் இருப்பதாக கூறினார். அதனைத் தொடர்ந்து நடந்த விசாரணயில் நித்யா நீண்ட நாட்களுக்கு இந்த தவறில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டது. ஏற்கெனவே அவர் இருந்த ஒரு பள்ளியில் புகார் எழுந்ததன் பெயரில் அவர் வேறு ஒரு பள்ளிக்கு மாற்றப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவை தவிர சேலத்தில் கொண்டாலம்பட்டியில் தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டார். இதேபோல் தமிழ்நாட்டில் சமீபத்தில் சில ஆண்டுகளில் நிறையே வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்தச் சூழலில் தற்போதும் அந்த அவலம் தொடர்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2012-ஆம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் பள்ளிகள் தங்களுடைய நிறுவனத்தில் பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும். அத்துடன் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு தொடர்பான விழிப்புணர்வையும் அளிக்க வேண்டும். ஆனால் இந்த விஷயம் தொடர்பாக எந்த பள்ளியும் பெரியளவில் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகபட்சம் பள்ளியில் ஒரு குழு மட்டும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் புகார் பேட்டியில் விழும் புகார்கள் தொடர்பாக இந்த குழுக்கள் விசாரணை செய்கின்றனவா என்பது பெரிய கேள்வி குறியாக உள்ளது. மாணவர்களின் புகாரை பள்ளிகள் கேட்டு ஒழுங்கான நடவடிக்கை எடுத்தால் இது போன்ற சம்பவங்கள் குறை வாய்ப்பு உள்ளதாக குழந்தை நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.