திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 3000 கோடி ரூபாய் மதிப்பிலான 4 கிகா வாட் உற்பத்தித்திறன் கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட சூரிய ஒளி மின்சார உற்பத்தித் திட்டத்தை டாடா நிறுவனம் நிர்மானிக்க உள்ளது. 


தமிழ்நாடு அரசு மின் பகிர்மானக் கழகத்தின் திட்டத்தின் கீழ் இந்தப் புதிய கட்டமைப்பு கொண்டுவரப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அடுத்த 10 ஆண்டுகளில் அதாவது 2030ல்  25 கிகா வாட் அளவிலான மின் உற்பத்தியைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதில் 20 கிகா வாட் அளவிலான சூரிய ஒளி மின்சார உற்பத்தி 3 கிகா வாட் அளவிலான நீர்வழி மின்சார உற்பத்தி மற்றும் சேமிப்பு மற்றும் 2 கிகா வாட் அளவிலான எரிவாயு மின்சார உற்பத்தி உள்ளிட்டவற்றுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாநில அரசு 1.32 டிரில்லியன் ரூபாய் அளவில் கடன் பெறத் திட்டமிட்டுள்ளது.இந்த புதிய கட்டுமானத்தால் சுமார் 2000 பேருக்கு அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.



முதல்கட்டப் பணியாக டாடா நிறுவனம் 684 மில்லியன் டாலர் மதிப்பிலான 3.3 கிகாவாட் சூரிய ஒளி உற்பத்திக் கட்டுமானத்தைக் கொண்டுவர உள்ளது. இது 2023 ஜூலை முதல் செயல்பாட்டுக்கு வரும் என நிறுவனத்தின் அதிகார பூர்வ தகவல்கள் கூறுகின்றன.
நாட்டின் ஒட்டுமொத்த மின் உற்பத்தித் தேவையில் 50 சதவிகிதம் இதுபோன்ற சூரிய ஒளி மற்றும் நீர் வழி மின்சார உற்பத்தி மூலமாக மறுசீரமைப்பு செய்யப்படும் என அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். மத்திய அரசு ஒருபுறம் இதுபோன்ற மின் உற்பத்தி மறுசீராய்வில் ஈடுபட மற்றொரு பக்கம் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும் சூரிய ஒளி மின்சார உற்பத்தி வணிகத்தில் களமிறங்கியுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் கனவுத் திட்டமான 100 கிகா வாட் சூரிய ஒளி மின்சார உற்பத்தித் திட்டத்தின் முதற்கட்டமாக ஜிகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 4 சூரியஓளி மின்சார உற்பத்தித் தொழிற்சாலையை அந்த நிறுவனம் ஜாம் நகரில் நிறுவ உள்ளது. சுமார் 60000 கோடியில் இந்தத் தொழிற்சாலை உருவாக உள்ளது. 2030ம் ஆண்டுக்குள் இந்த நிறுவனமும் செயல்படத் தயார் நிலையில் இருக்கும். 


மற்றொரு பக்கம் அதானி நிறுவனமும் சூரிய ஓளி மின்சார உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகிறது.அண்மையில் 3.5 கிகாவாட் அளவிலான சூரிய ஒளி மின்சார உற்பத்தித் திட்டத்தை அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது. தொடர்ச்சியாக இந்தியப் பெரு நிறுவனங்கள் சூரிய ஒளி மின்சார உற்பத்தித் திறனில் முதலீடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.