வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்து வரும் நாட்களில் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்தது. இதனால் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், இதர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்வதற்கும் வாய்ப்பு உள்ளது.



இன்று மற்றும் நாளை (நவம்பர் 24) தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், இதர மாவட்டங்கள்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிகிறது. 



இந்தநிலையில், 48 மணிநேரத்தில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகத்தை நோக்கி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வருகிற 25 ம் தேதி முதல் தமிழகத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒரே மாதத்தில் 3 வது முறையாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பரவலாக வருகிற 24, 25 மற்றும் 26 ம் தேதிகளில் கனமழைக்கு அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. 






 


இந்தநிலையில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வருகிற 26 ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 2017 நவம்பர் 1வது வார கனமழை உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா? அதேபோல், இந்த ஆண்டும் கடந்த காலங்களில் பெய்த மழை போல் சென்னை உள்ளிட்ட வட தமிழக கடலோர பகுதிகளில் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது. 


இன்று ஒருநாள் மட்டும் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. அதன்பிறகு தொடர்ந்து 4-5 நாட்கள் இடைவேளையுடன் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். இதனால் சென்னை மக்கள் துணி துவைக்க விரும்பினால் இன்று இரவே துவைத்து காயப்போட்டு கொள்ளலாம் என்று தகவல் தெரிவித்துள்ளார். 





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்




 


 


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்