ஃபோர்டு இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், இன்று முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் நீண்ட நாட்களாக வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. சென்னையில் மறைமலை நகர் மற்றும் குஜராத்தின் சனந்த் பகுதிகளில் அந்நிறுவனத்தின் வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறி, அவற்றை மூடப்போவதாக அறிவித்தது.
குஜராத் ஆலை இந்த ஆண்டு இறுதிக்குள்ளும், சென்னை ஆலை அடுத்த ஆண்டிலும் மூடப்படவுள்ளன. இந்த ஆலைகள் மூடப்பட்டால் நேரடியாக 8,000 பணியாளர்களும், மறைமுகமாக 30 ஆயிரம் பணியாளர்களும் வேலையிழப்பார்கள். இது அவர்களின் வாழ்வாதாரத்துக்கு மட்டுமின்றி, தமிழகம், குஜராத் மாநிலங்கள் மற்றும் இந்தியப் பொருளாதாரத்துக்கும் மிகப்பெரிய இழப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார நசிவு, கொரோனா கால வருவாய் இழப்புகள் என தமிழகம் தத்தளித்து வருகிறது. இத்தனை பேருக்கும் உடனடியாக மாற்று வாழ்வாதாரம் கிடைக்க வழியே இல்லை என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக, தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளுடன் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளரை சந்தித்த தொழிற்சாலை ஊழியர் அசோக் தெரிவிக்கையில், நீண்ட காலமாக இங்கு பணியாற்றி வருபவர்கள் இருக்கிறார்கள். சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக என் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்திற்காக அவர்கள் பல்வேறு தியாகங்களை செய்துள்ளனர். இருக்கும் ஊழியர்களின் பணி இழப்பை நாங்கள் விரும்பவில்லை
ஒவ்வொரு ஊழியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைவருக்கும் பணியைத் தொடர்ந்து செய்வதற்காக முயற்சிகளை எடுக்க வேண்டும். தொழிற்சாலை வேறு நிறுவனம் வாங்கும்போது எங்களுக்கான பணி உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார். அதற்கு நிர்வாகம் சார்பில் நாளை பதில் அளிக்க இருப்பதாக தெரிவித்தார், தொழிற்சாலை நிர்வாகத்தின் பதில்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நகர்வு குறித்து முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
டாடா நிறுவனம்: தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு ஃபோர்டு நிறுவனத்தின் ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, ஃபோர்டு இந்தியா நிறுவனச் சொத்துக்களை வாங்க எம்.ஜி மோட்டார் நிறுவனம் விருப்பம் தெரிவித்தது. எம்.ஜி மோட்டார் நிறுவனம், ஃபோர்டு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது.ஆனால், ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையே தோல்வியில் முடிவடைந்தன.
இதற்கிடையே, ஃபோர்டு நிறுவனத்தை டாடா குழுமம் வாங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இதுகுறித்து தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசனிடம் ABP NADU தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, ஃபோர்டு நிறுவனத்தை டாடா வாங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும். அவ்வாறு ஒரு நிறுவனம் இன்னொரு நிறுவனத்திற்கு, கை மாறும் பொழுது அதில் இருக்கும் ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவித்தார்.
எனவே, இந்த சூழலில் தமிழ்நாடு முதல்வரை டாடா குழுமத் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் சந்தித்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. முன்னதாக தமிழ்நாடு அரசின் சென்னை வெளிவட்ட சுற்றுச்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக, எண்ணூர் துறைமுகத்தில் இருந்து தச்சூர் வரையிலான (25.40 கிமீ) சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள டாடா நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், வாசிக்க:
ஃபோர்ட் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அனுராக் மல்ஹோத்ரா ராஜினாமா