ஃபோர்ட் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அனுராக் மல்ஹோத்ரா ராஜினாமா

’’ஃபோர்டு நிறுவனம் மூடப்பட்டுள்ள நிலையில் அதன் இந்தியா தலைமை செயல் அதிகாரி அனுராக் மல்ஹோத்ரா ராஜினாமா’’

Continues below advertisement
ஃபோர்ட் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அனுராக் மல்ஹோத்ரா பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக போர்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் உற்பத்தி இயக்குநராக இருக்கும் பாலசுந்தரம் ராதாகிருஷ்ணன் புதிய தலமைமை செயல் அதிகாரியாக, வரும் அக்டோபர் 21 ஆம் தேதி முதல் செயல்படுவார் எனவும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலசுந்தரம் ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் இடைக்கால பணிகளையும் மேற்கொள்வார் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 
இந்தியாவில் கார் உற்பத்தியை நிறுத்துவதாக ஃபோர்ட் இந்தியா அறிவித்துள்ள நிலையில், இறக்குமதி மூலம்' ஃபோர்ட் கார்கள் விற்பனை, இன்ஜின் தயாரிப்பு போன்றவை தொடர்ச்சியாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில் இந்தியாவில் எலெட்ரிக் கார் விற்பனையையும் தொடங்க உள்ளதாக ஃபோர்ட் தெரிவித்துள்ளது. பங்குதாரர்கள், வாடிக்கையாளர்களுக்கு ஃபோர்ட் எப்போதும் போல தனது பங்களிப்பை தொடர்ந்து வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைமலை நகர்  ஃபோர்ட் தொழிற்சாலைஹ்யில் எக்கோ ஸ்போட் வகை கார் உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், அடுத்த வருடம் வரை தொழிற்சாலை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
நாங்கள் எவ்வளவு முயற்சி செய்தும் நிறுவனத்தை லாப கணக்கில் செயல்பட வைக்க முடியவில்லை என அனுராக் மல்ஹோத்ரா இரண்டு மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஃபோர்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பாலசுந்தரம் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருப்பது, இந்தியாவில் இறக்குமதி, விற்பனை போன்ற விஷயங்களில் ஃபோர்ட் கவனம் செலுத்தும் என கூறப்படுகிறது.
 
ஃபோர்டு இந்தியா
 
அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் நீண்ட நாட்களாக வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. சென்னையில் மறைமலை நகர் மற்றும் குஜராத்தின் சனந்த் பகுதிகளில் அந்நிறுவனத்தின் வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

 
இந்த ஆலைகளில் வருடத்திற்கு நான்கு லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், தற்போது 80,000 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் அந்நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்தியாவில் உள்ள இரு ஆலைகளையும் மூட ஃபோர்டு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 
 
மறைமலைநகர் தொழிற்சாலை
 
தற்போது,  சென்னை அடுத்துள்ள மறைமலை நகரில் இருந்து ஃபோர்டு நிறுவனம் வெளியேறுவதால், நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் சுமார் 19 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலையில், நிரந்தர பணியாளர்களாக 2650 நபர்கள் பணியாற்றி வருகிறார்கள். 400க்கும் மேற்பட்ட பயிற்சி தொழிலாளர்களும், 700 நிர்வாகப் பணியாளர்களும், அதேபோல் நேரடி ஒப்பந்த பணியாளர்களை இரண்டாயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

 
இதுமட்டுமின்றி அந்த நிறுவனத்திற்கு உணவு, டீ, அடிப்படை வசதிகள், ஓட்டுனர்கள் உள்ளிட்ட பணி செய்து தரும் மறைமுக பணியாளர்கள் 2500க்கும் மேற்பட்ட நபர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிறுவனத்தின் மூலம் சுமார் 7 ஆயிரம் பணியாளர்களின் நேரடியாக பயன்பெற்று வருகின்றனர்.
 
 
மேலும் இந்த நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் சுமார் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் நிறுவனத்திற்கு மட்டும் பிரத்யேகமாக உதிரி பாகங்கள் தயாரிக்கும் மறைமுக ஊழியர்களாக, சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்பொழுது இந்நிறுவனம் மூடப்படும் என்பதால் மறைமுக பணியாளர்களாக பணிபுரிந்து வரும், 12000 நபர்களுக்கான வேலை இழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது.  மொத்தம் சுமார் 19 ஆயிரம் பணியாளர்கள் நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 
 
ஆலோசனைக் கூட்டம்
 
முன்னதாக, ஃபோர்டு அறிவிப்புக்குப் பின்பு சென்னை CIDCO அலுவலகத்தில் ஃபோர்டு நிறுவனத்திற்கு உதிரிப்பாகங்களை சப்ளை செய்யும் நிறுவனங்கள் உடனும், ஊழியர்கள் சார்பாகவும் தமிழ்நாடு ஊரகத் தொழிற்துறை அமைச்சர் டி.எம்.அன்பரசன் முன்னிலையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் டி.எம்.அன்பரசன் அவ, ஃபோர்டு தொழிற்சாலை இன்னமும் இயங்கி வருகிறது, இதனால் தற்போது நடக்கும் பேச்சுவார்த்தை மூலம் ஃபோர்டு நிறுவனம் தொழிற்சாலை மூடுவதற்குள் ஊழியர்களுக்குச் சாதகமான முடிவுகள் எடுக்கப்படும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
Continues below advertisement
Sponsored Links by Taboola