கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானதை அடுத்து, நேற்று மட்டும் தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் ரூ .426.24 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் விற்று தீர்ந்துள்ளது. இதில், சென்னையில் அதிகபட்சமாக ரூ.100.43 கோடியும், திருச்சியில் ரூ. 82.59 கோடியும், சேலம் மாவட்டத்தில் ரூ. 79.82 கோடியும், மதுரையில் ரூ. 87.28 கோடியும், கோயம்பத்தூரில் ரூ. 76.12 கோடியும் விற்பனையாகியுள்ளன. நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால், இன்றும் மதுபானங்கள் விற்பனை அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.     


தமிழகத்தில் கோவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக மே 10-ஆம் தேதி (நாளை) முதல் 24-ஆம் தேதி வரை  முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த ஊரடங்கு நாட்களில் அனைத்து வகையான மதுக் கூடங்களுக்கும் தமிழக அரசு தடை விதித்தது. மேலும், ஊரடங்கு காலத்தில் மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி மற்றும் மீன்கடைகள் மட்டும் நண்பகல் 12 மணிவரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளை தவிர இதர அனைத்து சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.



முன்னதாக, கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையிலும், பெருந்தொற்று நேரத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், ரூ.4153.39 கோடி செலவில், மே 2021 மாதத்தில் 2,07,66,950 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2000/ நிவாரணத் தொகையினை முதல் தவணையாக வழங்க தமிழக அரசு ஆணை வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.   


கோவிட் நோயால் பாதிக்கப்படுவதற்கான அபாயம் புகை பிடிப்பவர்களுக்கு அதிகமாக உள்ளது போல், குடிப்பழக்கமும் கோவிட் நோயால் பாதிக்கப்படக்கூடிய அபாயத்தை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவது உட்பட பல தீய பக்கவிளைவுகளை இப்பழக்கம் ஏற்படுத்துகிறது. ஊரடங்கு காலங்களில் மதுபானங்கள் உட்கொள்ளாத காரணமாக ஏற்படும் கோளாறுகளை தமிழக அரசு பொது சுகாதார பிரச்சனையாக கருதி ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.