சென்னையில் உள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு  நூலகத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து, அவர் தனது முகநூலில் , "முதலமைச்சர்  ஆணைக்கிணங்க, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில், சென்னையில் உள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை ஆய்வு செய்தேன். கடந்த பத்தாண்டு காலமாக அதிமுக அரசு எல்லா நூலகங்களையும் சீரழித்தது போலவே, தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கிய ஆசியாவின் மிகப்பெரிய நூலகமான இந்த நூலகத்தையும் முழுமையாக சீரழித்துள்ளது. இனி, அதுபற்றி பேசிப் பயனில்லை.


அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு  நூலகம் மட்டுமல்ல, தமிழகத்தில் திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட அனைத்து நூலகங்களும் கூடிய விரைவில் சீரமைக்கப்பட்டு, அடுத்த தலைமுறை இளைஞர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்" என்று பதிவிட்டார். 




தமிழ்நாட்டில்,  கன்னிமாரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், 32 மாவட்ட மைய நூலகங்கள், 1926 கிளை நூலகங்கள், 14 நடமாடும் நூலகங்கள்,1915 ஊர்ப்புற நூலகங்கள், 745 பகுதி நேர நூலகங்கள் என மொத்தம் 4634 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், " கோவிட்19 காலத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பு, கல்விக்கட்டணம், 12-ஆம் வகுப்பு தேர்வு நடத்துவது ஆகியவை குறித்து வரும் திங்கட்கிழமை ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.





முன்னதாக 9, 10 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவரும், முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். மேலும், மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு நெறிமுறைகள் அரசினால் விரிவாக வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். 


கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்தண்டும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், மாணவர்களின் வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும்  வழங்கப்பட்டது. ஆனால், இந்த கல்வியாண்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலாண்டு தேர்வையும், அரையாண்டு தேர்வையும் முந்தைய அரசு ரத்து செய்தது. இதன் காரணமாக, எதன் அடிப்படையில் மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு வழங்கப்படும்  என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.




 


இதுவரை, 10-ஆம் வகுப்பு மதிப்பெண் மதிப்பீட்டு நெறிமுறைகள் தொடர்பான  எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கான மதிப்பெண் பட்டியல் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் கோவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாளை முதல் 24-ஆம் தேதி வரை  முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் கல்வி நலன் காக்கும் வகையில் தமிழக அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது.