கனமழையால் தக்காளி விலை உயர்வு... கனமழையால் வெங்காயம் விலை உயர்வு... இப்படி தான் நாம் செய்திகளை கேட்டுக்கொண்டிருக்கிறோம்... கடந்து கொண்டிருக்கிறோம். இதுவும் ஒரு விலைவாசி தொடர்பான செய்தி தான். ஆனால், விலை போகாத பொருள் பற்றிய செய்தி. சொன்னால் நம்ப கொஞ்சம் சிரமமாக இருக்கலாம். ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.
கனமழையால் டாஸ்மாக் மதுபான விற்பனை கடுமையாக சரிந்துள்ளதாம். அதிர்ச்சி வேண்டாம்... உண்மை அது தானாம். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய போது கூட, அதன் நடுவே நின்று ‛கட்டிங்’ போட்ட நம்மவர்கள், கனமழையில் டாஸ்மாக் மதுபானத்தை தவிர்த்திருக்கிறார்கள் என்பது ஆரோக்கியமானது தான். பொதுவாக மழை காலம் என்றால், இந்த கிளைமெட்டிற்கு ஒரு ‛கட்டிங்’ போடுவோமா... என்ற கூறுபவர்களை தான் பார்த்திருப்போம். ஆனால், மழைக்கு பயந்து டாஸ்மாக் கடையை ஒதுக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது புதுசு தான்.
தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 300 டாஸ்மாக் மதுபான கடைகளை அரசு நடத்துகிறது. இவற்றின் மூலம் வழக்கமாக நாள் ஒன்றுக்கு ரூ.110 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறும். பண்டிகை காலம் என்றால், அதன் விற்பனை பன்மடங்காகும். குறிப்பாக தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என்றால் விற்பனைவக்கு டார்க்கெட் கொடுக்கப்பட்டு பல மடங்காக விற்பனை அதிகரிக்கப்படும். ஆனால் சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் டாஸ்மாக் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாம்.
குறிப்பாக கடந்த 15 நாட்களாக டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பவை 40 சதவீதம் வரை குறைந்துள்ளதாம். பல கடைகளில் மழை வெள்ள நீர் புகுந்ததும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 5 லட்ச ரூபாய் வரை விற்பனையாகும் கடையில், தற்போது ரூ.2 லட்சத்திற்கும் குறைவாகவே விற்பனை நடைபெறுகிறதாம். வெளியில் காலங்களில் நன்கு விற்பனையாகும் பீர் வகைகள், மழை காலத்தில் பொதுவாகவே விற்பனையில் சரிவை சந்திக்கும். இந்த முறை அதன் சரிவு அதிக அளவில் உள்ளதாம். கிட்டத்தட்ட 60 சதவீதத்திற்கும் அதிகமாக பீர் விற்பனை சரிவை சந்தித்துள்ளதாம்.
தற்போது கார்த்திகை மாதம் வேறு தொடங்கியிருப்பதால் பலரும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்துள்ளனர். இதனால் வழக்கமாகவே கார்த்திகை மாதத்தில் மது விற்பனை கணிசமாக குறையும். எனவே இந்த மாதம் மது விற்பனை மேலும் குறையும் என தெரிகிறது. டாஸ்மாக் மதுபான விற்பனை குறைவு என்பது வருந்தக்கூடிய விசயம் அல்ல; அது குடும்பங்களுக்கு மட்டுமே மகிழ்ச்சியான செய்தி. அதே நேரத்தில், பிரதான வருமானமாக இருப்பதால் அரசு தரப்பில டாஸ்மாக் விற்பனை குறைவு, பெரும்கவலையை ஏற்படுத்தியிருக்கிறதாம். சில மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே மதுபானம் என்கிற அறிவுறுத்தலும் நடைமுறையில் உள்ளது. அதனாலும் குறைந்திருக்க வாய்ப்பு உண்டு என்கின்றனர்.