தமிழ்நாட்டில் கடந்த நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.45 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளதாக நிதித்துறைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். 


தமிழ்நாடு அரசின் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல துறை சார்ந்த பல்வேறு திட்டங்கள் பற்றியும், அவற்றிற்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் அவர் அறிவித்தார்.


தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிதித்துறை செயலாளர் முருகானந்தம், கடந்த நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.45 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் வரும் நிதியாண்டில் இதன் இலக்கு ரூ.50 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசுக்கு வருவாய் அளிக்கும் முக்கிய கருவியாக டாஸ்மாக் திகழ்கிறது.


மற்ற நாட்களை தவிர்த்து பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை போன்ற நாட்களில் டாஸ்மாக் மதுபான விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் கடந்த நிதியாண்டில் தீபாவளியையொட்டி 2 நாட்களில் ரூ.464.21 கோடியும், புத்தாண்டு மற்றும் பொங்கல் விடுமுறையில் தலா ஆயிரம் கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 5,300 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. 


கடந்தாண்டு மார்ச் மாதத்தில் மதுபானங்களின் விலை சற்று உயர்த்தப்பட்டாலும் தொடர்ந்து டாஸ்மாக் வசூலானது ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனை வருமானம் அதிகரித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.