சென்னையில் உலகளாவிய விளையாட்டு மையம் அமைக்கப்படும் என தமிழக அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பட்ஜெட் தாக்கல்:


பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அடுத்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை அவர் வாசிக்க தொடங்கியதுமே, அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, நிதியமைச்சரின் பட்ஜெட் உரையினை தவிர்த்து மற்றவை அவை குறிப்பில் இடம்பெறாது என தெரிவித்தார். இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். 


சர்வதேச தரத்திலான விளையாட்டு மையம்:


மூன்றாவது முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார். குறிப்பாக, சர்வதேச தரத்திலான உலகளாவிய விளையாட்டு மையம் CMDA மூலம் சென்னையில் அமைக்கப்படும் என அறிவித்தார். விளையாட்டில் சாதிக்க தமிழக இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


ஒலிம்பிக் அகாடெமி:


சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வெல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்த தமிழக இளைஞர்களுக்கு உலக தரம் வாய்ந்த பயிற்சிகளை வழங்கக்கூடிய வகையில், தமிழ்நாட்டில் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகடாமி உருவாக்கப்படும் என்று ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில், சென்னையில் அமைய உள்ள சர்வதேச தரத்திலான விளையாட்டு மையம், தமிழக இளைஞர்களுக்கு மேலும் ஒரு உந்துகோலாக இருக்கும் என கருதப்படுகிறது.