விஜய்யின் தவெக, தமிழக கட்சிக்கும் B-டீம் இல்லை. டெல்லி கட்சிக்கும் B-டீம் இல்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டு அரசியல் களத்தில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தி வருபவர் விஜய். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அமைதியாக இருந்தவர் விக்கிரவாண்டியில் நடந்த முதல் அரசியல் மாநாட்டிற்கு பிறகு தனது அரசியல் பயணத்தை மிகவும் தீவிரப்படுத்தியுள்ளார்.


விஜய்க்கு ஆதரவாக களத்தில் குதித்த வாசன்:


விஜய்யின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வரும் நிலையில் விமர்சனங்களுக்கு பதில் அளிக்காமல் தனது பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார் விஜய். இந்த நிலையில், விஜய்க்கு ஆதரவாக தமிழக அரசியலில் ஒரு அரசியல் தலைவர் குரல் கொடுத்துள்ளார்.


அவர் வேறு யாரும் அல்ல, முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜி.கே. வாசன். மயிலாடுதுறையில் திருமண விழா ஒன்றில் பங்கேற்க வந்த வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தன்னுடைய புதிய கட்சி, அதன் கோட்பாடுகள், வளர்ச்சி என்ற அடிப்படையில் செயல்பட முடியுமே தவிர மற்ற கட்சிகளை சந்தோஷப்படுத்துவதற்காக தன் கட்சியின் கோட்பாடுகளை கொடுக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை.


"பி டீமாக தெரியவில்லை"


அக்கட்சியின் வருங்கால செயல்பாடுகள், மக்கள் பணி இவற்றையெல்லாம் வைத்துத்தான் கணிக்க முடியும். காலம்தான் அதற்கு பதில் சொல்ல முடியும். பொறுத்திருந்து பார்ப்பதுதான் விவேகமான அரசியலாக இருக்க முடியாது. தமிழக வெற்றிக் கழகம் டெல்லியில் இருக்கக் கூடிய கட்சிக்கும் பி டீமாக தெரியவில்லை, தமிழகத்தில் இருக்கக்கூடிய கட்சிக்கும் பி டீமாக தெரியவில்லை" என்றார்.


கடந்த ஞாயிற்றுக்கிழமை பனையூரில் உள்ள விஜய்யின் இல்லத்தில் தவெகவின் செயற்குழு கூட்டம் நடந்தது. முதல் மாநாட்டில் கொள்கைகளை அறிவித்த விஜய், செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்களை நிறைவேற்றி கட்சிக்கான வியூகம் என்ன என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார். இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு, அரசு நல திட்டங்கள், இரு மொழி கொள்கை என திராவிட கட்சிகளின் பாதையையே விஜயும் தேர்வு செய்திருக்கிறார்.


இதையும் படிக்க: US Election Result 2024: மீண்டும் அமெரிக்க அதிபராகும் டொனால்ட் ட்ரம்ப் - வெற்றிக்கு ”வாழ்த்துகள் நண்பரே” பிரதமர் மோடி டிவீட்