தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கிய நிலையில், சென்னை உள்பட பல மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது.



காலை 7 மணி வரை:


இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் காலை 7 மணி வரை அதாவது அடுத்த ஒரு மணி நேரத்திற்கு புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. இந்த 3 மாவட்டங்களில் மழை அதிகளவு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை:

அதேசமயம். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், நீலகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் காலை முதலே பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் அதிகாலை முதலே மழை வெளுத்து வாங்கியது. கோயம்பேடு, வடபழனி, வளசரவாக்கம், விருகம்பாக்கம், கோடம்பாக்கம், பாரிமுனை, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்ததால் பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால், காலையில் பணிக்குச் செல்வபர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.