தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஜனவரியில் இருந்து மே மாதம் வரை மழைப்பொழிவு குறைவாக இருக்கும். குறிப்பாக, மார்ச். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெயில் கொளுத்தும். இதுபோன்ற கோடை காலங்களில் அவ்வப்போது வெயிலின் சூட்டைத் தணிக்க மழைப்பொழிவு இருக்கும்.
கோடையில் கொட்டும் மழை:
ஆனால், கடந்தாண்டு தமிழ்நாட்டில் கோடை மாதத்தில் நல்ல மழைப்பொழிவு இருந்தது. இந்தாண்டும் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக தமிழ்நாட்டில் கடந்த ஓரிரு தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் அடுத்த 1 மணி வரை நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் 1 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை மிதமாக பெய்வதற்கு வாய்ப்புகள் அதிகளவு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தொடரும் மழை:
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையைப் பொறுத்தவரை புறநகரில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மழை பெய்தது. கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மாலை நேரத்தில் பெய்த இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய பகுதியும், தமிழ்நாட்டின் மிகவும் முக்கியமான சுற்றுலா தளமான கொடைக்கானலில் இன்று அதிகாலை திடீரென கனமழை பெய்தது. இதனால், அந்த பகுதியில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தென்மாவட்டங்களான ராமநாதபுரம், கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் மழை பரவலாக பெய்தது. தென்காசி, தூத்துக்குடி, விருதுகர் மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புகள் அதிகளவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வானிலையும் மேகமூட்டத்துடனே காணப்படுகிற. மேலும், டெல்டா மாவட்டங்களான தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
தண்ணீர் இருப்பு எப்படி?
தமிழ்நாட்டிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேசமயம், தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளின் நீர்மட்டத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ள பகுதிகளில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மேலும், சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக திகழும் புழல், செம்பரம்பாக்கம் உள்ள ஏரிகளின் நீர்மட்டத்தையும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து மழை நீடித்தால் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு எதிர்பார்த்ததை விட அதிகளவு மழை பெய்திருந்த காரணத்தால் இந்த கோடை காலத்திற்கு தேவையான தண்ணீர் இருப்பதாக அதிகாரிகள் ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.