வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதலே தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தீபாவளி நாளான நேற்று இரவே சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இன்றும் பல மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், இரவு 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
10 மணி வரை 18 மாவட்டங்களில் மழை:
இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, கரூர், திருப்பத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மினன்லுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்:
தீபாவளி பண்டிகை கொண்டாட்டமாக இன்று பட்டாசு வெடிக்கும் பலருக்கும் இந்த மழை இடையூறாக அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே மழை தொடர்ந்து பெய்து வரும் சூழலில், நவம்பர் மாதத்திலும் மழைப்பொழிவு அதிகளவில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், அதன் காரணமாக அடுத்து வரும் நாட்களில் தமிழ்நாட்டில் மழை அதிகளவு பொழியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தமிழக அரசு வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சென்னை திரும்பும் மக்கள்:
சென்னையில் நேற்று முன்தினம் பெய்த திடீர் மழையால் சாலைகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியது. இதனால், சென்னையில் பெருமழை பெய்தால் அதற்கேற்றவாறு மழைநீரை அகற்ற ஏதுவாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் நேற்று இரவு முதலே சென்னை திரும்பத் தொடங்கியுள்ளனர்.
இதனால், மழை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையிலும் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.