தமிழ்நாட்டில் கடந்த மாதம் முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. சென்னை உள்பட பல மாவட்டங்களிலும் மழை பெய்தது. வடகிழக்குப் பருவமழையும் தொடங்கியதால் கடந்த மாதம் தமிழ்நாட்டில் வழக்கத்தை விட அதிக மழை பெய்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு தொடர்ந்து மழை இருக்கம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,
இன்று, நாளை கனமழைக்கு வாய்ப்பு:
“ நவம்பர் 1ம் தேதியான இன்று திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
7ம் தேதி வரை எப்படி?
நாளை மறுநாள் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை. ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 4ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் நவம்பர் 5,6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
இன்று மற்றும் நாளை தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அரபிக்கடல் பகுதிகளில் இன்று மற்றும் நாளை கேரள கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் இன்றும், நாளையும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.