தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக கடிதம் எழுதியுள்ளது.


அந்த கடிதத்தில், ”நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 19.02.2022 அன்று நடைபெற உள்ளதையொட்டி, வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி, நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் தமிழகமெங்கும் மாவட்டத்திற்கு மாவட்டம், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, அலுவலர் வேறுபட்ட நடைமுறைகளை பின்பற்றுகின்றனர். இது சம்பந்தமாக உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் புரியும்படியான வேட்பு மனுத் தாக்கலின் விபரம் எளிதாக இருக்கும்படி, தமிழ் நாடு தலைமைத் தேர்தல் ஆணையம் உடனடியாக ஒரு சுற்றறிக்கை அனுப்ப வேண்டியது கட்டாயமாகிறது.


குறிப்பாக,



  • மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர். பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்குப் போட்டியிடும் உ வேட்பாளர்களுக்கு, சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் புதிதாக கணக்கு தொடங்கி, அந்தக் கணக்கில் இருந்து தேர்தல் செலவுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை இருப்பதைப் போல, இந்தத் தேர்தலிலும் தனித் தனியாக அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் இருந்து கணக்கு தொடங்கப்பட வேண்டுமா?

  • போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் மீது குற்ற வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என்ற தடையில்லாச் சான்றிதழை, குறிப்பிட்ட காவல் நிலையங்களில் இருந்து பெற்று அதை வேட்பு மனுவுடன் இணைக்க வேண்டுமா?

  • வேட்பு மனுவில் குறிக்கப்பட்டுள்ள சொத்து விவரங்களுக்கான ஆவணங்களை வேட்பு மனுவுடன் இணைக்க வேண்டுமா?



என்பதையும், உடனடியாக அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கும், அந்தந்தப் பகுதியின் குறிப்பிட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் தமிழ் நாடு மாநில தலைமைத் தேர்தல் ஆணையம் ஒரு சுற்றறிக்கையை அனுப்ப வேண்டும் என்றும், காரணம் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படுகின்ற இந்த நாட்களில் மேற்சொன்ன காரணங்களின் அடிப்படையில் வெவ்வேறு கருத்துக்களையும், வெவ்வேறு நிலைப்பாட்டையும், அந்தந்த மாவட்டத் தேர்தல் அலுவலர்களும், அந்தந்த பகுதியின் தேர்தல் அலுவலர்களும் மேற்கொண்டிருக்கிறார்கள். இது மிகப் பெரிய குழப்பத்தையும், தேவையில்லாத வேலை பலுவையும் வேட்பாளர்களுக்கு ஏற்படுத்துவதாகக் கருதுகிறோம்.


குறிப்பாக, கோவை, சேலம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, திருவண்ணாமலை, சென்னை போன்ற மாவட்டங்களில், இது சம்பந்தமாக பல புகார்கள் எங்கள் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலம் எனக்கு நேரடியாக வரப்பெற்றுள்ளது. எனவே, அதன் அடிப்படையில், இந்தப் புகாரின் மீது துரித உடனடி நடவடிக்கை வேண்டி இந்த மனு அளிக்கப்படுகிறது.


நாளை மறுதினம், வேட்பு மனுத் தாக்கல் நிறைவுபெற உள்ள நிலையில், உடனடியாக ஒரு சுற்றறிக்கை அனுப்பி, வேட்பாளர்களுக்கும், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் வேட்பு மனுத் தாக்கலை எளிதாக்கி, சுமூகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டியது, தேர்தல் ஆணையத்தின் கடமை. எனவே, உடனடியாக இந்த வேண்டும் என்று மனுவின் மீது அவசர நடவடிக்கை எடுத்து, சுற்றறிக்கை அனுப்ப  கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.