தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் போக்குவரத்து துறையில் தனியார் அனுமதிக்கப்பட உள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியானது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் நமது ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, "அரசு பேருந்து போக்குவரத்தில் தனியாரை அனுமதிக்கவுள்ளதாக பரவும் தகவல் வெறும் வதந்தி ஆகும். இதனை யாரும் நம்ப வேண்டாம். அரசு போக்குவரத்து துறையில் தனியாரை கொண்டுவர வேண்டும் என்ற பேச்சே எழவில்லை. தமிழ்நாடு அரசின் நற்பெயரை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர்" இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரின் பேட்டியால் தற்போது போக்குவரத்து துறையில் தனியார்மயம் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.
முன்னதாக தமிழக அரசு பேருந்து போக்குவரத்து துறையில் தனியாரை அனுமதிக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக கூறி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டு இருந்த நிலையில் அமைச்சர் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதேபோன்று தொடர்ச்சியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர உள்ளதாகவும், அதற்காக ஒரு விலைப்பட்டியலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அப்போது. இந்த விவகாரம் பெரும் விவாதத்ததை ஏற்படுத்தியது. அப்போதும், தமிழ்நாட்டில் பேருந்து கட்டண உயர்வு என்பது வெறும் வதந்தி என்று அமைச்சர் விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாடு முழுவதும் வெள்ளை நிற அதாவது சாதாரண கட்டண பேருந்துகளில் மகளிர் பயணம் செய்ய அனுமதி இலவசம் என்ற அதிரடி அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டது. மாநில அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு முழுவதும் பெருத்த வரவேற்பு கிட்டியது. இந்த திட்டத்தால் தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டம் மற்றும் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை சமாளிக்க பேருந்து கட்டணங்கள் உயர்வு, தனியாருக்கு பேருந்து சேவையில் அனுமதி உள்ளிட்ட பல்வேறு வதந்திகள் அவ்வப்போது இணையத்தில் உலா வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்