தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் பணிகளை வேகப்படுத்த பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், டிஆர்பி நடத்திய சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை மட்டுமே தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள இடைநிலை / பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புதல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னை உயர்நீதிமன்ற ஆளுகைக்குட்பட்ட 24 மாவட்டங்களில் மட்டும் (சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ஆளுகைக்குட்பட்ட 14 மாவட்டங்கள் நீங்கலாக) தற்காலிக ஆசிரியர் நியமனம் சார்ந்து விண்ணப்பதாரர்களிடமிருந்து மாவட்டக் கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தற்காலிக ஆசிரியர் நியமனம் சார்ந்து பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களை கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றியும், காலஅட்டவணைப்படி பணிகளை மேற்கொள்ளுமாறும் தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தற்காலிக ஆசிரியர் நியமனம் சார்ந்து சென்னை உயர் நீதிமன்ற இடைக்கால ஆணையின்படி இடைநிலை ஆசிரியர் , பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையும், முதுகலை ஆசிரியர் பதவிக்கு, முதுகலை ஆசிரியர் தெரிவுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டவர்களையும் மட்டுமே தற்காலிக நியமனம் செய்யத்தக்க வகையில் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவேண்டும்.
2) தற்காலிக ஆசிரியர் நியமனம் சார்ந்து வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுள் ஒரு காலிப்பணியிடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்டவர் விண்ணப்பம் செய்திருப்பின் முன்னுரிமையின் அடிப்படையில் நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
3) மேற்சொன்னவாறான நடவடிக்கைகள் கீழ்க்காணும் காலஅட்டவணைப்படி மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
அதாவது, அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் வரும் 15-ம் தேதிக்குள் தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும். தேர்வானவர்களின் பட்டியலை சரிபார்த்து வரும் 18-ம் தேதிக்குள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஒப்புதல் தர வேண்டும்.
தற்காலிக ஆசிரியராகத் தேர்வானோர் வரும் 20-ம் தேதி அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் பணியில் சேர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்