போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனின் துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ். சிவசங்கர் போக்குவரத்துத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
பின்னணி என்ன?
நடராஜன்..
போக்குவரத்து துறையின் துணை ஆணையரான நடராஜனின் எழிலகம் அலுவலகத்தில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி அதிரடி ரெய்டு நடந்தது. அதில் 30 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கம், டைரி உள்ளிட்டவை சிக்கியது. துணை ஆணையர் நடராஜன் மற்றும் பணம் சரிபார்க்கும் அவரது உதவியாளர் மீது இந்த ரெய்டின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த ரெய்டுக்கு பிறகு அதிகம் அடிபட்டவர் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் தான். அவரும் துணை ஆணையரான நடராஜனும் மிகவும் நெருக்கமானவர்கள் எனக் கூறப்பட்டதே அடுத்த புகைச்சலுக்கு காரணமாக கூறப்பட்டது. லஞ்சத்தில் திளைக்கும் நடராஜன் எந்த சிக்கல் வந்தாலும் அமைச்சரின் பெயரைக் கூறுவதும் துறை ரீதியிலான பணியை சரியாக செய்யாமல் அமைச்சர் பெயரைக் குறிப்பிட்டே நாட்களை நடத்தியதாகவும் எழிலகத்தில் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டது.
இந்த நேரத்தில் நடராஜன் மீதான ரெய்டும் அதனைத் தொடர்ந்து அடிபடும் ராஜகண்ணப்பனின் பெயரும் திமுக தலைமைக்கு சென்றதாக அப்போதே கூறப்பட்டது. இது அடுத்தக்கட்டத்துக்கு சென்றால் அமைச்சரவையில் மாற்றம் கூட வரலாம் என கிசுகிசுக்கப்பட்டது . இது ஒருபுறம் புகைச்சலில் இருக்கும் நேரத்தில்தான் ஒருமையில் திட்டிய விவகாரத்தில் மீண்டும் சிக்கினார் ராஜகண்ணப்பன். தொடர் சர்ச்சையில் சிக்கியதால் திமுக தலைமை இந்த இலாகா மாற்றத்தை கையில் எடுத்து எச்சரிக்கை கொடுத்துள்ளதாக கிசுகிசுக்கின்றனர் அரசியல் வட்டாரத்தினர்.
முதுகுளத்தூர் :
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளராக பணிபுரிபவர் ராஜேந்திரன். இவரை நேற்று 27.3.22 காலை போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சிவகங்கை வீட்டிற்கு வர சொல்லியதாக கூறப்படுகிறது. அதனை கேட்டு அவரும், ஊராட்சி ஒன்றிய (கிராம ஊராட்சி) ஆணையாளர் அன்புகண்ணன் ஆகியோர் சென்றுள்ளனர்.
வீட்டின் உள்ளே நுழைந்த உடன் போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ராஜேந்திரனை நீ SC BDO தானே என்று கூறி நீ சேர்மன் (அதிமுக) பேச்சை கொண்டு தான் நடப்பாய், நாங்கள் சொல்வதை கேட்பது இல்லை என்று கூறி SC BDO என்று 6 தடவைக்கு மேல் SC BDO என்று கூறியுள்ளார். உடனே உன்னை தூக்கி அடிக்க வேண்டும் என அமைச்சர் கூறி உள்ளதாக தெரிகிறது. உன்னை AD கிட்ட சொல்லி உடனே தூக்கி அடிக்கிறேன் என்று ஒருமையில் பேசி உள்ளதாக கூறினார். இதனையடுத்து மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று அவரை சந்திக்காமல் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மனம் நொந்து போன ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். போக்குவரத்து துறை அமைச்சர் வீட்டில் நடந்த அனைத்தையும் தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விவகாரம் ஊடகங்களிலும் சோஷியல் மீடியாக்களிலும் வேகமாக பரவியது. பல்வேறு கட்சியினரும் கண்டனத்தை பதிவிட்டனர். இது குறித்து அறிக்கை வெளியிட்ட மக்கள் நீதி மய்யம்,
ஒரு பக்கம் சமூக நீதி காக்க முதலமைச்சர் ஸ்டாலின் குழு அமைக்கிறார். சாதி மதம் கடந்தது எங்கள் திராவிட மாடல் என்று பெருமையாக பேசுகிறார். ஆனால் அவர் அமைச்சரவையில் இருக்கும் போக்குவரத்துத்துறை அமைச்சர் மீது சாதிய ரீதியான புகார் வந்துள்ளது வெட்கக்கேடானது. இதுகுறித்து உடனடியாக விசாரித்து, இது உண்மை எனும் பட்சத்தில் போக்குவரத்துறை அமைச்சரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டது. ஆனால் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றத்துக்கு இதுமட்டுமே காரணம் இல்லை எனக் கூறப்படுகிறது.