தொழிற்சங்கங்களின் 2ஆம் நாள் வேலை நிறுத்த போராட்டம் - புதுச்சேரியில் பொதுமக்கள் அவதி

2-வது நாளாக இன்றும் தொழிற்பேட்டைகள் மூடப்பட்டிருந்தது. வங்கிகளும் போராட்டத்தில் பங்கேற்றதால் இன்றும் பண பரிவர்த்தனை வெகுவாக பாதிப்பு

Continues below advertisement

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்த வேண்டும் என்பது உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் மகா சம்மேளனமும், அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து மார்ச் 28 மற்றும் 29ஆம் தேதிகளில்  வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து நாடு முழுவதும் நடத்தி வருகின்றனர். புதுவையில் ஐ.என்.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., தொ.மு.ச., ஏ.ஐ.டி.யூ.சி., எம்.எல்.எப்., எல்.எல்.எப்., ஏ.ஐ.யூ.டி.யூ.சி. உட்பட தொழிற்சங்கங்கள், மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றன. மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

Continues below advertisement


2 ஆவது நாளான இன்று தொழிற்சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக. உட்பட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன. இதன்படி இன்று காலை 6 மணிக்கு பந்த் போராட்டம் தொடங்கியது. போராட்டத்தால் புதுவையில் தனியார் பேருந்துகள்  ஓடவில்லை. புதுவையை பொறுத்தவரை தனியார் பேருந்துகள் அதிகம் என்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். புதிய பேருந்து நிலையத்தின் பெரும் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

ஆட்டோ, டெம்போக்கள் இயங்கவில்லை. அதே நேரத்தில் புதுவை மற்றும் தமிழக அரசு பேருந்து இயக்கப்பட்டது. புதுவை பணிமனையில் இருந்தும் தமிழக அரசு பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டது. பிரதான சாலைகளான மறைமலை அடிகள் சாலை, காமராஜர் சாலை, நேருவீதி, மி‌ஷன் வீதி, அண்ணா சாலை, புஸ்சிவீதி, 100 அடி சாலையில் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தது. பாலகம், மருந்தகம் மட்டும் திறக்கப்பட்டிருந்தது.


தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. பெரிய மார்க்கெட்டில் காய்கறி, பழம், மளிகை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 2-வது நாளாக இன்றும் தொழிற்பேட்டைகள் மூடப்பட்டிருந்தது. வங்கிகளும் போராட்டத்தில் பங்கேற்றதால் இன்றும் பண பரிவர்த்தனை வெகுவாக பாதிக்கப்பட்டது. நகர்ப்புறத்தில் உட்புற சாலைகள், குடியிருப்பு பகுதியில் சிறிய கடைகள் திறக்கப்பட்டிருந்தது. புறநகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் சில கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கியது.


புதுவையில் பெரும்பாலான தனியார், அரசு பள்ளிகள் வழக்கம் போல இயங்கியது. ஒரு சில தனியார் பள்ளிகள் பேருந்துகளையும் இயக்கியது. ஒரு சில தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்திருந்தனர். 10-ம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்றதால் பெற்றோர்களே தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்து விட்டுச் சென்றனர். கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டிருந்தது. கல்லூரி பேருந்துகளும் இயக்கப்பட்டது. நகர பகுதியில் பெட்ரோல் பங்குகள், ஓட்டல்கள் மூடப்பட்டிருந்தது. புதுவையில் 11 இடங்களில் தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. பந்த் போராட்டத்தையொட்டி மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகள், முக்கிய சாலை சந்திப்புகள், தொழிற்பேட்டைகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola