கடந்த செப்டம்பர் 21 அன்று இரவு, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. இடி, மின்னல் என இரவு முழுவதும் பெய்த மழையில், அதிகளவில் மின்னல்கள் தென்பட்டன. பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் அதிக மின்னல்கள் தோன்றுவதாகவும், அவற்றுள் பெரும்பாலானவை ஆபத்தானவை எனவும் மின்னல்கள் குறித்த அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எர்த் நெட்வொர்க்ஸ் (Earth Networks) என்ற சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள `2020 India Lightning Report’ என்ற ஆய்வு முடிவுகளின்படி, இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டைவிட, 2020ஆம் ஆண்டு மின்னல்களின் எண்ணிக்கை சுமார் 22.6 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தோன்றும் மின்னல்களைப் பற்றிய இந்த ஆய்வில், அதிகளவில் மின்னல்கள் தோன்றிய `டாப் 5 மாநிலங்கள்’ என்ற பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. இந்த வரிசையில் அடுத்தடுத்த இடங்களை ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, ஒடிஷா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன.
கடந்த 2020ஆம் ஆண்டில், அதிக மின்னல்கள் உற்பத்தி நிகழ்ந்த மாநிலங்களின் ஒப்பீட்டில் கர்நாடகா, மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றிருந்தன. எர்த் நெட்வொர்க் நிறுவனத்தின் Total Lightning Network என்ற மின்னல் கண்காணிப்புத் தொழில்நுட்பம் இந்தியா முழுவதும் கடந்த 2020ஆம் ஆண்டு, சுமார் 39.5 மில்லியன் மின்னல்களுக்கும் மேல் உற்பத்தி நிகழ்ந்துள்ளதாகக் கண்டறிந்துள்ளது. இவற்றுள் சுமார் 1.2 கோடி மின்னல்கள் மேகங்களில் இருந்து நிலத்தைத் தாக்கும் அளவுக்கு ஆபத்தானவை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய ஆபத்தான மின்னல்கள் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிஷா, மேற்கு வங்காளம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிகளவில் தோன்றியுள்ளன.
இந்தியா முழுவதும் இடி, மின்னல்கள் நிறைந்த ஆபத்தான கன மழை குறித்து சுமார் 7447 எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன எனவும், அவற்றுள் பெரும்பாலானவை தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டவை எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சத்திஸ்கர், ஒடிஷா ஆகிய மாநிலங்களிலும் 2019ஆம் ஆண்டு சுமார் 10 லட்சம் மின்னல்கள் மேகத்தில் தோன்றி தரையில் தாக்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
`2020ஆம் ஆண்டு, இந்தியாவில் மே, ஜூன், செப்டம்பர் ஆகிய மாதங்களில், மழைக்காலம் காரணமாக அதிகளவில் மின்னல்கள் தோன்றியுள்ளன. 2019ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், மின்னல்களின் எண்ணிக்கை சுமார் 22.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது’ என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா இந்தியப் பெருங்கடலுக்கும், பூமியின் மத்திய ரேகைக்கும் மிக அருகில் இருப்பதால் அதிகளவில் கடுமையாகவும், திடீரெனவும் கனமழை தோன்றும் வாய்ப்புகள் இருக்கின்றன. தெற்கு ஆசியா முழுவதும் இருக்கும் இத்தகைய வானிலை சூழல், இந்தியாவின் மக்கள்தொகை காரணமாக மின்னல்கள் மூலமாகவு, கடுமையான வானிலை சூழல் மூலமாகவும் ஆபத்தான விளைவுகளை உருவாக்குகின்றன. தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, இந்தியா முழுவதும் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் சுமார் 2360 பேர் மின்னல் தாக்குதலால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.