டென்மார்க்கில் உள்ள சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை கடல்வளங்களை பாதுகாக்கும் பொருட்டு சிறந்த முறையில் பராமரிக்கப்படும் கடற்கரை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தண்ணீரின் தரம், பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து நீலக்கொடி சான்றிதழ் வழங்கி வருகிறது. நீலக்கொடி சான்றிதழ் என்பது உலகளவில் மிகவும் புகழ்பெற்ற சான்றிதழ் ஆகும். நீலக்கொடி சான்றிதழ் பெறுவது என்பது உலகளவில் கடற்கரை பராமரிப்பில் மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது.


இந்த நிலையில், இந்தியாவில் உள்ள இரண்டு கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கோவளம் கடற்கரைக்கும், புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரைக்கும் தற்போது நீலக்கொடி சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த அறிவிப்பின் மூலம் இந்தியாவில் நீலக்கொடி சான்றிதழ் பெற்ற கடற்கரைகளின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.




இந்தியாவில் ஏற்கனவே குஜராத்தில் உள்ள ஷிவ்ராஜ்புர் கடற்கரை, தியூவில் உள்ள கோக்லா கடற்கரை, கர்நாடகாவில் உள்ள கசரகோட் மற்றும் படுபித்ரி கடற்கரைகள், கேரளாவில் உள்ள கப்பாட், ஆந்திராவில் உள்ள ருஷிகோண்டா கடற்கரை, ஒடிசாவில் உள்ள கோல்டன் கடற்கரை, அந்தமானில் உள்ள ராதாநகர் கடற்கரைகளுக்கு  ஏற்கனவே நீலக்கொடி சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.






மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் தூய்மை இந்தியா மற்றும் பசுமை இந்தியாவை நோக்கிய பயணத்தின் மற்றொரு மைல்கல் இது என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.




மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில் தற்போது 10 சர்வதேச நீலக்கொடி கடற்கரைகள் இருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். கோவளம் மற்றும் ஈடன் கடற்கரை இந்தாண்டு கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நீலக்கொடி சான்றிதழ் பெற்ற 8 கடற்கரைகளுக்கும் மீண்டும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றும் பதிவிட்டுள்ளார்.