விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரயிலில் சென்றபோது ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மெய்யநாதன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 


நடந்தது என்ன..? 


தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று இராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் மேற்கொண்டார். 


சென்னை வருவதற்காக புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் ஏறிய அமைச்சர் மெய்யநாதன் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்தார். அப்போது அவருக்கு அசெளகரியமாக உணரவே, திடீரென ரத்த அழுத்தம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் நள்ளிரவு 2 மணியளவில் அமைச்சர் மெய்யநாதன் சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து கடலூரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


இதையடுத்து அமைச்சர் மெய்யநாதனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிக்கைக்கு பின்னர் அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதனுக்கு  மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். 


தகவல் அறிந்ததும் கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்பி சக்திகணேசன், நேரில் வந்து அமைச்சரை பார்த்து நலம் விசாரித்தார்.


அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை மாவட்ட மறமடக்கி கிராமத்தை சேர்ந்தவர். திமுக கட்சியைச் சேர்ந்த தமிழக அரசியல்வாதி ஆவார். கடந்த 2016 மற்றும் 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இரண்டு முறை சட்டபேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த 2021 தேர்தலில் 25,847 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிமுகவை சேர்ந்த தர்மா தங்கவேலை தோற்கடித்தார். தற்போதைய தமிழக அமைச்சகத்தில், சுற்றுச்சூழல் துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்து வருகிறார்.