தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் காலாண்டு தேர்வு முடிந்த பிறகு விடுமுறை விடப்படுவது வழக்கம் ஆகும். அந்த வகையில் காலாண்டு தேர்வு விடுமுறையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வெளியூர்களுக்கு, சொந்த ஊர்களுக்கு அல்லது சுற்றுலா தளங்களுக்கு செல்வது வழக்கம் ஆகும்.


காலாண்டு விடுமுறை:


காலண்டு தேர்வுகள் வரும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுவதால் வரும் அக்டோபர் 6ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியூர் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வெள்ளிக்கிழமை முதல் பேருந்துகளில் கூட்டம் அலைமோதும் என்று கருதப்படுகிறது.


இதையடுத்து, அரசுப்போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “ வெள்ளிக்கிழமை (27.9.2024), சனிக்கிழமை (28.9.2024), ஞாயிற்றுக்கிழமை (29.9.2024) வார விடுமுறை மற்றும் பள்ளிகள் காலாண்டு விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


சென்னையில் இருந்து எத்தனை பேருந்துகள்?


இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு,, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை ( நாளை மறுநாள்) 395 பேருந்துகளும், சனிக்கிழமை 345 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.


கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு நாளை மறுநாள் 70 பேருந்துகளும், வரும் சனிக்கிழமை 70 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முன்பதிவு:


மாதவரத்தில் இருந்து நாளை மறுநாள் 20 சிறப்பு பேருந்துகளும், நாளை மறுநாள் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படுகிறது. ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை 12 ஆயிரத்து 691 பயணிகளும், சனிக்கிழமை 5 ஆயிரத்து 186 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை 7 ஆயிரத்து 790 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.”


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.