புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு வாழ்த்துகள் குவிந்தபடி இருக்கின்றன. புதிய அரசு பொறுப்பேற்றாலே பூங்கொத்துக்களுடன் புனித ஜார்ஜ் கோட்டை நோக்கிப் படையெடுக்கும் தமிழ்நாட்டின் முக்கியப் பிரமுகர்கள் இந்த முறைப் படையெடுப்பில் பூங்கொத்துகளைத் தவிர்த்துள்ளதுதான் சுவாரஸ்ய செய்தி. 

முதலமைச்சர், அமைச்சர்கள், செயலர்களைச் சந்திக்க வருபவர்கள் புத்தகங்களைப் பரிசளிப்பது புதிய செய்தியில்லை என்றாலும் வெகுசிலர் மட்டுமே அதனை வழக்கமாகக் கொண்டிருந்தனர். சிலர் பூங்கொத்துக்களோடு புத்தகங்கள் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.  ஆனால் தற்போதைய புதிய அரசு பொறுப்பேற்றிருக்கும் சூழலில் இந்த நிலை அடியோடு மாறிவிட்டதாகச் சொல்கிறார்கள் செயலர்களின் தனிச் செயலாளர்கள். அமைச்சர்களின் அறைகளிலும் அதிகாரிகளின் அறைகளிலும் ரிப்பன் கட்டி அடுக்கி வைக்கப்பட்ட அன்பளிப்பு புத்தகங்கள் தென்படுகின்றன. காரணம் என்ன?




‘புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர்களும் நியமிக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான அதிகாரிகளும் புத்தக விரும்பிகள் என்பது ஒரு காரணம் என்றாலும் கொரோனா பரவல் அச்சத்தால் பூங்கொத்துகள் எடுத்து வரவேண்டாம் என அமைச்சர்களின் தனி அதிகாரிகளே அறிவுறுத்துகின்றனர்.மேலும் பூக்களைப் பராமரிப்பதில் நிறையவே சிக்கல் இருக்கிறது. அவை உதிராமல் வாடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொரோனா பேரிடர் வேலை பரபரப்பில் அதெல்லாம் சாத்தியமில்லை. அதுவும் ஊரடங்கு காலத்தில் பூங்கொத்து விற்பவர்களை எங்கே போய் தேடுவது.அதற்கு புத்தகம் அன்பளிப்பாகக் கொடுப்பது எளிதான தேர்வல்லவா?. கொரோனா வேலைகளில் இருக்கும் அதிகாரிகளுக்கு புத்தகங்களைப் படிக்க நேரமிருக்காது என்றாலும் குறைந்தபட்சம் அவர்களின் புத்தக அலமாரிகளுக்கு அவை செல்லும் என்கிற நம்பிக்கையாவது அளிப்பவர்களுக்கு இருக்கும்.' என்கிறார் செயலர் ஒருவரின் தனி அதிகாரி. 

பெரும்பாலும் தமிழ்நாட்டு முன்னாள் முதலமைச்சர்களான அண்ணாதுரை, கருணாநிதி எழுதிய புத்தகங்களே பரிசுகளாக கொடுக்கப்பட்டு வந்த நிலையில் இந்த முறை ரொமிலா தாப்பர், யுவால் நோவா ஹராரி போன்ற வரலாற்று ஆய்வாளர்களின் புத்தகங்கள் இடம்பெற்றிருப்பதுதான் கூடுதல் சுவாரசியம். 


”என் புத்தகத்தை வாங்கவேண்டாம்!”




இதற்கிடையே தனிப்பட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அரசு தலைமைச் செயலர் வெ.இறையன்பு 'எந்தத் திட்டத்தின் கீழும் நான் எழுதிய புத்தகங்களை வாங்கக் கூடாது’ என அன்புக் கோரிக்கை வைத்துள்ளார். 

அன்புடன் வேண்டும் அவரது அறிக்கையில், ‘நான் பணி நேரம் முடிந்த பின்பும், விடுமுறை நாட்களிலும் எனக்குத் தெரிந்த தகவல்களை வைத்தும், என் அனுபவங்களைத் தொடுத்தும் சில நூல்களை எழுதி வந்தேன். அவற்றில் உள்ள பொருண்மை, கடற்கரையில் கண்டெடுத்த சிப்பியையே முத்தாகக் கருதி சேகரிக்கும் சிறுவனின் உற்சாகத்துடன் எழுதப்பட்டவை. இப்போதுள்ள பொறுப்பின் காரணமாக பள்ளிக் கல்வித்துறைக்கு நான் ஒரு மடல் எழுதியுள்ளேன். நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும் எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமைச் செயலராகப் பணியாற்றும் வரை எந்தத் திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது என்கிற உத்தரவே அது. பார்ப்பவர்களுக்கு என் பணியின் காரணமாக அது திணிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றி களங்கம் விளைவிக்கும் என்பதால்தான் இத்தகைய கடிதத்தை எழுதியிருக்கிறேன். எந்த வகையிலும், என் பெயரோ, பதவியோ தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதே நோக்கம்.


அரசு விழாக்களில் பூங்கொத்துகளுக்கு பதிலாக புத்தகங்கள் வழங்கினால் நன்று என்கிற அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஆணை அது. அரசு விழாக்களில் அரசு அலுவலர்கள் யாரும் என்னை மகிழ்விப்பதாக எண்ணி என்னுடைய நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ பரிசாக பூங்கொத்துகளுக்கு பதில் விநியோகிக்க வேண்டாம் என்று அன்புடன் விண்ணப்பம் வைக்கிறேன். இவ்வேண்டுகோள் மீறப்பட்டால் அரசு செலவாக இருந்தால் தொடர்புடைய அதிகாரியிடம் அது வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்படும். சொந்த செலவு செய்வதையும் தவிர்ப்பது சிறந்தது. எனவே, இத்தகைய சூழலை எக்காரணம் கொண்டும் ஏற்படுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு அரசு புத்தகங்களை இத்தனை முக்கியமானதாக கருதுவதும் விவாதிப்பதும் மகிழ்வுடன் வரவேற்க வேண்டிய ஒன்றுதான்.