தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக ராதாபுரம் எம்.எல்.ஏ அப்பாவு நியமிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் தி.மு.க ஆட்சியமைத்தது. இதையடுத்து, தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலினும் அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதில் 15 புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில், 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. 

 

நெல்லையின் முக்கியத்துவம்:

 

திமுக அமைச்சரவை பட்டியலில் விடுபட்ட மாவட்டங்களில் ஒன்று நெல்லை. தென் மாவட்டங்களில் முக்கிய மாவட்டமான நெல்லையில் இருந்து எப்போதும் ஒரு அமைச்சர் சட்டமன்றத்தை அலங்கரிப்பார். அதற்கு திமுக, அதிமுக என எந்த கட்சியும் விதிவிலக்கல்ல. ஆனால், கடந்த 2006-ஆம் ஆண்டு, திமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்த ஆவுடையப்பன் இந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். தென்காசி மாவட்டம் பிரிக்கப்படாமல், ஒன்றுபட்ட நெல்லை மாவட்டமாக இருந்தபோது ஆலங்குளத்தில் வெற்றி பெற்ற பூங்கோதையும், நெல்லையை சேர்ந்த டி.பி.எம் மைதீன்கான் ஆகிய இருவரும் அதே ஆண்டில் அமைச்சர்களாக இருந்தனர். இதன் தொடர்ச்சியாக இந்த முறை புதிய அமைச்சரவையிலும் திருநெல்வேலி மாவட்டத்துக்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. பாளையங்கோட்டையில் வெற்றி பெற்ற அப்துல் வகாபும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. இந்நிலையில், சட்டசபையில் நீண்ட அனுபவம் உள்ளவரான அப்பாவுவை முன்னிறுத்துவது என தி.மு.க தலைமை முடிவு செய்தது,

 

கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளர் இன்பதுரையிடம் அப்பாவு தோற்றுப் போனதாக அறிவிப்பு வெளியானது. இது தொடர்பாக, நீதிமன்றத்தில் நடக்கும் சட்டப் போராட்டமும் முடிவுக்கு வரவில்லை. அந்தத் தேர்தலில் அப்பாவுதான் வெற்றி பெற்றார் என தி.மு.க தலைமை நம்புகிறது. கடந்த 5 ஆண்டுகளாக சட்டப்பேரவைக்கு வெளியே அவர் சட்டப்போராட்டம் நடத்தி வந்தது திமுக தலைமைக் கழகத்தை கவனிக்கவைத்தது. தற்போது நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமைச்சரவையில் அப்பாவு இடம்பெறுவார் என அனைவரும் நினைத்தனர். ஆனால், அவர் இடம்பெறவில்லை. இந்நிலையில், தென்மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சபாநாயகர் பதவிக்கு அப்பாவு முன்னிறுத்தப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து துணை சபாநாயகராக கீழ் பென்னாத்தூர் எம்.எல்.ஏ பிச்சாண்டி தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன என்றனர்.

 

மேலும், தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளாராக 1996-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற அப்பாவு, அதன்பின்னர் 2001 தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், தி.மு.கவில் இணைந்தவர், 2006 சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். 2011 தேர்தலில் ராதாபுரம் தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு தி.மு.க விட்டுக்கொடுத்தது. இதன்பின்னர், 2016 தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

த.மா.காவில் இருந்து வந்தாலும் திராவிட கொள்கைகளில் உறுதியான பிடிப்புள்ளவராக அப்பாவு பார்க்கப்படுகிறார். 2016 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது ஜெயலலிதா அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையாக போராடியவர். அதன் தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்து இன்பதுரையின் வெற்றிக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தார். சட்டசபையிலும் நீண்ட அனுபவம் உள்ளவராகப் பார்க்கப்படுகிறார். இதன் காரணமாகவே, சபாநாயகர் பதவிக்கு அவர் முன்னிறுத்தப்பட உள்ளார்" என்கின்றனர்.

 

அப்பாவு அணுகுமுறை எப்படி ? மக்கள் கருத்து என்ன?

 

மிகவும் எளிமையான மனிதர், நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே அவரது சொந்த ஊர். அது கொஞ்சம் கிராமப்புறமாக இருப்பதால் அங்குள்ள குழந்தைகள் கல்விக்கு இவர் அதிகமாகவே முக்கியத்துவம் கொடுத்தார். எளிய மக்களும் நேரில் சந்திக்க கூடிய மிக எளிமையான மனிதர் என்பது இந்த ஊர் மக்களின் கருத்தாக இருக்கிறது. வயதின் அடிப்படையில், அனுபவத்தின் அடிப்படையில் நெல்லையில் இருந்து ஒருவர் தமிழக சட்டமன்றதை சபாநாயகராக அலங்கரிக்கப்போவது ஒட்டுமொத்த நெல்லை மக்களுக்கும் மகிழ்ச்சி என்றே கூறுகின்றனர். விவசாயிகள், மாணவர்கள் என பல்வேறு மக்கள் பிரச்சனைக்கு எதிராக குரல் கொடுத்தது என பல்வேறு மக்கள் போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறார் அப்பாவு. சட்டப்பேரவை நடவடிக்கைகளில் அதிக அனுபவம் உள்ளவர் என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டிருக்கும் இப்பொறுப்பு, அப்பாவுவின் சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த மரியாதை என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

 

சபாநாயகராக அப்பாவு மிளிர்வாரா என்பதற்கு காலம் விடைகூறும்.