தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்றார். அவர் பதவி ஏற்றவுடன் முதல்வரின் தனி செயலாளர்களாக உதயசந்திரன், உமாநாத், சண்முக சுந்தரம் மற்றும் அனு ஜார்ஜ் ஐ.ஏ.எஸ் ஆகியோரை நியமித்தார். அத்துடன் தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமித்து உத்தரவிட்டார். அதன்பின்னர் முக்கிய பொறுப்புகளுக்கான ஐபிஎஸ் அதிகாரிகளையும் மாற்றி உத்தரவிட்டார். 


இந்நிலையில் முதல்வரின் தனி செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு பேருக்கு துறை வாரியான பணி ஒதுக்கீடு தற்போது செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதல்வரின் முதல் செயலாளர் உதயசந்திரன் ஐஏஎஸ் பொது நிர்வாகம், உள்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, தொழில்துறை , சிறப்பு திட்டங்கள் செயல்பாடு, தொழில்நுட்பத்துறை, திட்டம் மற்றும் இந்து அறநிலையத்துறை போன்ற முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 


முதல்வரின் இரண்டாவது செயலாளரான உமாநாத் ஐ.ஏ.எஸ்  நிதி, உணவுத்துறை, சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு,  போக்குவரத்து, நகர்ப்புற நிர்வாகம், தண்ணீர் விநியோகம், நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது செயலாளரான சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சட்டம், தொழிலாளர் நலன், வேளாண், சட்டமன்றம், ஊரக வளர்ச்சி, வருவாய், முதலமைச்சரின் அலுவலக நிர்வாகம், மனிதவளம், கூட்டுறவு உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 




நான்காவது செயலாளரான அனு ஜார்ஜ் ஐஏஎஸ் சுற்றுச்சூழல், இளைஞர் நலன், பிற்படுத்தப்பட்டோர் நலன், ஆதிதிராவிடர் நலன், சமூக நலம் மற்றும் பெண்கள் முன்னேற்றம், சுற்றுலா, சமூக சீர்திருத்தம், கால்நடை, கைத்தறி, மாற்றுத்திறனாளிகளின் நலன் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டு நிர்வாகத்தில் ஒவ்வொரு துறைக்கும் தனி செயலாளர்கள் இருந்தாலும் இந்த துறைகளை மேற்பார்வை செய்வதற்கு இந்த நான்கு செயலாளர்களுக்கும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு செயலாளர்கள் தமிழ்நாடு ஆட்சி நிர்வாகத்தில் இதன்மூலம் பங்குவகிக்க உள்ளனர். ஏற்கெனவே பதவி ஏற்றது முதல் அதிரடி நடவடிக்கை எடுத்துவரும் முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது துறைவாரியாக தனது செயலாளர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்து மற்றொரு சிறப்பான நடவடிக்கையை எடுத்துள்ளார்.