தமிழ்நாட்டிற்கு வட கிழக்கு பருவமழை, கடந்த மாதம் அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில், கடந்த சில தினங்களாக கனமழை விடிய விடிய பெய்து வருகிறது.


குறிப்பாக நேற்று முன் தினம் தொடங்கி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.இந்நிலையில் நேற்றும் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுகும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. 


தொடர்ந்து இன்று மதியம் முதல் மழை சற்று ஓய்ந்த நிலையில், நேற்றைப்போல இன்று மழை இருக்காது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முன்னதாகத் தெரிவித்திருந்தார். 


மேலும், தொடர்ந்து இரண்டு நாட்களாக விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு நாளை விடுமுறை கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார்.


இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாளைய தினம் விடுமுறைக்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு, ஹாட்ரிக் லீவ் எதிர்பார்க்க வேண்டாம் குழந்தைகளே… ஹோம்வொர்க்கெல்லாம் முடித்து ரெடியாக இருங்கள்", என்று ஜாலியாகப் பதிவிட்டிருந்தார்.


 






ஆனால், இன்று மாலை முதல் சென்னையின் பல பகுதிகளிலும் மீண்டும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அதன்படி, சென்னையில் நுங்கம்பாக்கம், நந்தனம், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், தாம்பரம், ஏர்போர்ட், வளசரவாக்கம், போரூர் ஆகிய பகுதிகளில் மாலை தொடங்கி மழை பெய்து வருகிறது. அதேபோல் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.


இந்நிலையில் நாளை மீண்டும் விடுமுறை அளிக்கப்படுமா அல்லது பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம்போல் இயங்குமா என்பது குறித்து பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன.


தமிழக பகுதிகளின் மேல்  நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,


03.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.




04.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.


05.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, தேனி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.