தமிழ்நாடு முழுவதும் 35 துணிக்கடைகளுக்கு தொடர்பான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, நெய்வேலி, கரூர், திருப்பூர், உதகை, நாமக்கல், குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடந்து வருகிறது.


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு துணிகளை வாங்க துணி கடைகளில் இந்த ஆண்டு மக்கள் கூட்டம் அலைமோதின. கொரனோ காலகட்டத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட அனுமதிக்கப்படாத நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளி பண்டிகை இந்த வருடம் வெகு விமர்சையாக கொண்டாடபட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து துணிகடைகளிலும் மக்கள் துணிகளை வாங்கி சென்ற நிலையில் பிரபலமான துணி கடைகள் வரி ஏய்ப்பு செய்ததாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து இன்று புதுவை மற்றும் கடலூரில் அமைந்துள்ள  கே.வி டெக்ஸ் துணிக்கடை, வீடு  ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர் சோதனை செய்தனர்.


மேலும், விழுப்புரத்தில் பிரபலமான மகாலாட்சுமி குழுமத்திற்கு சொந்தமான கிரின்ஸ் பிளாசா, துணி கடைகள், கன்னிகா பரமேஸ்வரி துணி கடை மற்றும் வீடுகள் என 10 இடங்களில் 50க்கும் மேற்பட்ட வருமான வரிதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையிலிருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து பிரபலமான துணி கடைகளில் ஆய்வு செய்வதால் கடைகள் மூடப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் புதுச்சேரி சாலையிலுள்ள மகாலட்சுமி பிளாசாவிற்கு பொருட்கள் வாங்க வந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு விழுப்புரம் புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டன. இதே போன்று கன்னிகா பரமேஸ்வரி துணிக்கடைகளிலும் அதன் உரிமையாளர் வீடுகளிலும் அதிகாரிகள் வாடிக்கையாளர்களை வெளியில் அனுப்பி விட்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும், கரூர் மாவட்டத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் (சிவா டெக்ஸ்டைல்ஸ்) கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கரூர் நகரம், குளித்தலை மற்றும் சேலம், திருப்பூர், ஊட்டி உட்பட ஜவுளி நிறுவனத்திற்கு சொந்தமான கிளைகள், வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை. இதன் ஒருபகுதியாக சேலம் நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ள ஜவுளி கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் இறங்கியுள்ளனர்.