தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


தமிழ்நாட்டில் மேல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வரும் நாட்களில் வானிலை குறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதை காண்போம். 


நாளை:


நாளைய தினத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


மேலும் , கோவை நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


ஆகையால், இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டங்கள் முன்னெச்சரிக்கையாக திட்டங்களை வகுத்து கொள்ளுங்கள். 






ஆகஸ்ட் 19: 


கோவை நீலகிரி, திருப்பூர்,  தேனி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


இன்று: 


கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தூத்துக்குடி, ராமநாதபுரம் பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


தென்மேற்கு பருவமழை:


தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும். நடப்பாண்டிற்கான தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி தொடங்கியது. தென் மேற்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழ்நாட்டில் மழை தொடர்ந்து அதிகளவில் பெய்து வருகிறது.


இந்த சூழலில், கடந்த ஜூன் 1ம் தேதி முதல் இன்றைய தேதி வரை தமிழ்நாட்டில் பதிவான தென்மேற்கு பருவமழையின் அளவு குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 1.6.2024ம் ஆண்டு முதல் 17.08.2024 ( இன்று) வரை தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் மொத்தம் 308.5 மி.மீட்டர் மழை பொழிந்துள்ளது.


அதிகளவு மழை:


வழக்கமாக தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் 164.4 மி.மீட்டர் மழை பொழிவு பதிவாகும். ஆனால், இந்த முறை இயல்பை விட பல மடங்கு அதிகளவு மழை பதிவாகியுள்ளது. இயல்பை காட்டிலும் 88 சதவீதம் அதிகளவு மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது