தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென்மாவட்டங்களில் இந்த முறை வழக்கத்தை காட்டிலும் அதிகளவு மழைப்பொழிவு பெய்து வருகிறது. வங்கக்கடலில் விரைவில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ள நிலையில், மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
கனமழை காரணமாக தென்மாவட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக குறிப்பிடுகிறது.
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டத்தில் அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. மழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் பல மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் என்று கருதப்படுகிறது. மேலும், பல இடங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை அபாயம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்காரணமாக, அந்தந்த மாவட்ட நிர்வாகம் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், கரையோர மக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.