திருச்செந்தூரில் கோயில் யானை மிதித்து உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு உரிய உதவி செய்து தரப்படும் என அமைச்சர் சேகர் பாபு வாக்குறுதி கொடுத்துள்ளார். 


சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபுவிடம் யானை மிதித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கும் நிதியுதவி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “முதலமைச்சர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தொடர்பு கொண்டு பேச சொல்லியிருந்தார். அந்த வகையில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் வேல் முருகன் நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை பார்த்திருக்கின்றார். இது எதிர்பாராத ஒரு சம்பவம். 


அந்த யானையே அவர் இறந்தபிறகு அந்த பிரேதத்தை பார்த்து அழுததும், தட்டி தட்டி எழுப்பியதும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். சிறிதளவு ஏற்பட்ட சினத்தால் இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. சிசிடிவி காட்சியை பார்த்தால் தெரியும். இருந்தாலும் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒருவர் யானை பாகனாக கோயிலில் பணியாற்றிக்கொண்டிருந்தவர். மற்றொருவர் ஏற்கெனவே பாகனாக இருந்தவருடைய மகன். நிச்சயமாக அந்த இரண்டு குடும்பங்களுக்கும் முதலமைச்சர் உதவுவதாக சொல்லியிருக்கிறார். நிச்சயமாக உதவுவோம். தகுதியிருந்தால் இறந்த பாகனின் மனைவிக்கு உரிய பணி உத்தரவாதமும் தருவோம். 


இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு யானைகளை பொறுத்தவரை மாதம் இருமுறை கால்நடை மருத்துவர்களை வைத்து பரிசோதித்து வருகிறோம். யானைகளுக்கு தேவையான உணவுகள், உடற்பயிற்சிகள் ஆகியவற்றை கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்றே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நீச்சல் குளம் கூட இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.  


நேற்றைய தினம் நடந்த சம்பவம் மிகவும் துயரமானது. மனம் வருந்துகிறோம். கலங்குகிறோம். இனி நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது குடும்பங்களுக்கு உரிய உதவியை நிச்சயம் செய்வோம்” எனத் தெரிவித்தார். 


முன்னதாக, திருச்செந்தூர் முருகன் கோயிலில் யானை மிதித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருவர் யானை பாகனாக இருந்தவர். இன்னொருவர் அவரது உறவினர். யானைக்கு சிறிது கோபம் வந்ததையடுத்து இருவரையும் மிதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.