தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை பரவலாக பெய்து வந்த நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டின் பல இடங்களிலும் நேற்று முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
இந்த நிலையில், கனமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருவாரூர், அரியலூர், காஞ்சிபுரம், வேலூர், தூத்துக்குடி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மழையின் தன்மை குறித்து ஆய்வு செய்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். கரூர், திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடரும் கனமழை:
தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், திருநெல்வேலியில் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மட்டுமின்றி திருவண்ணாமலை மாவட்டத்திலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் கடந்த வாரம் உருவாகிய ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை காரணமாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதுடன் பல மாவட்டங்களில் நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு இதுபோன்று தீவிர மழை இருக்கும் என்றே வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நேற்று இரவு மழை கொட்டித் தீர்த்தது. விடிய, விடிய சென்னையில் பெய்த மழையால் காலையில் பணிக்குச் செல்பவர்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.