காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  அதன்படி, மயிலாடுதுறை , தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் , ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. 


தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,  இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,  தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. 


தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்ததால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி நின்றதால் மாநகராட்சி ஊழியகள் தேங்கியிருந்த நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கத்திப்பாரா சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி நின்றதால் அந்த சுரங்கப்பாதை நேற்று மூடப்பட்டது. 


சென்னையில் சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட ஒருசில இடங்களில் இன்று காலை மழை பெய்த நிலையில், தற்போது லேசான வெயில் அடிக்க துவங்கி உள்ளது. 


நேற்று சென்ட்ரல் ரயில் தண்டவாளம் பகுதியில் மழை நீர் தேங்கியதன் காரணமாக சென்னை சென்ட்ரலில்  இருந்து புறப்பட வேண்டிய  7 ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டது.  மேலும் மழை நீர் தேங்கியதன் காரணமாக, வியாசார்பாடி- பேசின்பிரிட்ஜ்  இடையேயான பாலம் எண் 14-ல் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.  தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி, சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய திருப்பதி எக்ஸ்பிரஸ் திருவள்ளூரில் இருந்தும், கோவை செல்லக்கூடிய இன்டர்சிட்டி விரைவு ரயில் ,லால்பாக் விரைவு ரயிகள் ஆவடியில் இருந்து புறப்பட்டன. 


மேலும் படிக்க,


தமிழ்நாட்டை குறிவைக்கும் பாஜக...அமித் ஷாவை தொடர்ந்து ஒருநாள் பயணமாக இன்று சென்னை வரும் ராஜ்நாத் சிங்!


Senthil Balaji : ”நாளை அதிகாலை செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்...!