Senthil Balaji :காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


நாளை அறுவை சிகிச்சை


சென்னை சைதாப்பேட்டை செட்டித்தோட்டம் பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணின் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "நாளை அதிகாலை செந்தில்பாலாஜிக்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. நீதிமன்ற உத்தரவை அடுத்து அறுவை சிகிச்சைக்காக செந்தில்பாலாஜி காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். செந்தில்பாலாஜிக்கு 3 ரத்த நாளங்களில் அடைப்பு உள்ளதாக மருத்துவர்கள் அறிக்கை அளித்திருந்தனர்” என்றார். 


மேலும், ”அறுவை சிகிச்சை செய்வதற்கான உடல்தகுதியை செந்தில் பாலாஜி நேற்று இரவு பெற்றார். அப்பல்லோ மருத்துவமனையின் பிரபல மருத்துவர் செங்குட்டுவன் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என உறுதிப்படுத்தியிருந்தார். ஒன்றிய அரசின் இஎஸ்ஐ மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என  உறுதி செய்துள்ளனர். எனவே செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.
 
வழக்கில் இருந்து தப்பிப்பதற்கு ஒருவர் இதய அறுவை சிகிச்சை செய்வார்களா..? இதுபோன்று சந்தேகிப்பது ஒட்டுமொத்த மருத்துவர்களின் நேர்மை தன்மையும் மருத்துவ குணத்தையும் சந்தேகப்படுவதாக இருக்கிறது. இதுகுறித்து அமலாக்கத்துறை தான் விளக்கம் தர வேண்டும்” அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 


"அதிகளவில் மழை பெய்தும் பாதிப்பில்லை”


தொடர்ந்து பேசிய அவர், "கடந்த இரண்டு ஆண்டுகளாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து துறைகளில் ஒருங்கிணைந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 200 கிலோமீட்டர் புதிய மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய மழை வந்த போதிலும் சென்னையில் உள்ள சுரங்கங்களில் மழை நீர் தேங்காமல் இருந்தது. 


நேற்று முன் தினம் சென்னையில் ஒரே நாளில் 16 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. அதிக மழை பெய்தும் பெரிய அளவில் பாதிப்பில்லை. மழைநீர் வடிகால் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதால் பாதிப்புகள் குறைந்தன.  மழையால் பாதிக்கப்பட்ட ஒருசில இடங்களிலும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


பின்னணி


மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட தொடர்புடைய இடங்களில்  அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர். தலைமைச்செயலகத்தில் உள்ள அவரின் அறையில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையானது சுமார் 17 மணி நேரம் நீடித்த நிலையில் கடந்த 13ஆம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் செந்தில் பாலாஜியை கைது செய்து அமலாக்கத்துறையினர் அழைத்து சென்றனர்.  அப்போது அவர் நெஞ்சு வலி என அழுத நிலையில், அவரை உடனே ஓமந்தூரார் மருத்துவமனையில் அமலாக்கத்துறையினர் அனுமதித்தனர். 


செந்தில்பாலாஜிக்கு இதயத்தில் அடைப்பு இருந்ததாகவும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள்  தெரிவித்ததை அடுத்து, கடந்த 15ஆம்  தேதி இரவு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் செந்தில் பாலாஜி இருந்து வரும் நிலையில், எட்டு நாட்கள் அவரை  அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ளவும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.