காலிப்பணியிடங்கள்:


இரண்டாம் நிலைக் காவலர் , இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிக்கையை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜுலை மாதம் வெளியிட்டது. இதன் கீழ், ஆயுதப்படை காவலர்கள்,  1,091 தமிழ்நாடு சிறப்பு காவல் படை வீரர்கள் 161 இரண்டாம் நிலை சிறை காவலர்கள்,  120 தீயணைப்பு வீரர்கள் என, மொத்தம் 3552 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக, 2,99,887 ஆண்கள், 66,811 பெண்கள் மற்றும் 59 திருநங்கைகள் என மொத்தம் 3 லட்சத்து 66,727 பேர் விண்ணப்பித்துள்ளனர். 


தேர்வு நேரம், வினாத்தாள் விவரம்:


காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, இன்று காலை 10 மணி முதல் 12.40 மணி வரை  நடைபெற உள்ளது. 80 வினாக்களை உள்ளடக்கிய  தமிழ்மொழி தகுதித் தேர்வும், 70 வினாக்களை உள்ளடக்கிய  முதன்மை எழுத்துத் தேர்வும் நடைபெறும். இரண்டு ஒரே வினாத்தாள் தொகுப்பாக கேட்கப்பட உள்ளது. மாநிலத்தின் 35 நகரங்களில் உள்ள 295 மாவட்ட மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்பதற்கான அனுமதிச்சீட்டு கடந்த 15ம் தேதியே வெளியிடப்பட்ட்து.


தேர்வர்களுக்கான வழிகாட்டுதல்கள்:


தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க, அனைத்து மவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை காவல் ஆணையர்கள்  ஆகியோர் துணைக்குழு தலைவர்களாகவும், ஏடிஜிபி, ஐஜி, டிஐஜி ஆகியோர் சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வர்கள் நுழைவுச் சீட்டு மற்றும் எழுது அட்டை தவிர வேறு எந்த பொருளையும் தேர்வு எழுதும் அறைக்குள் கொண்டு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புகைப்படம் ஒட்டப்படட்ட நுழைவுச்சீட்டுடன் , குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு அறைக்குள் வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னையில் மட்டும் நியூகல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 16 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.


பாதுகாப்பு ஏற்பாடுகள்:


தருமபுரி மாவட்டத்தில் 9 மையங்களிலும், மதுரையில் 12 மையங்களிலும் தேர்வு நடைபெற உள்ளது. இரண்டாம்நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் முறைகேடு நடைபெறுவதை தடுக்க, அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.