மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் நடைபெற்று வரும் கலைத் திருவிழா போட்டிகளில், இன்று (நவம்பர் 26) வரை சுமார் 16 லட்சம் மாணவர்கள் பங்கு பெற்றுள்ளனர். 


தமிழ்நாட்டில்‌ பள்ளிக் கல்வித்‌ துறையின்கீழ்‌ இயங்கி வரும்‌ அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ அனைத்து மாணவ / மாணவிகளும்‌ பங்கேற்கும்‌ வகையிலான கலை நிகழ்ச்சிகள்‌ "கலைத்‌ திருவிழா” என்னும்‌ பெயரில்‌ நடைபெற்று வருகின்றன. 






கலைத் திருவிழாப்‌ போட்டிகள்‌  3 பிரிவில்‌ நடத்தப்‌பட்டு வருகின்றன. 


பிரிவு 1 : 6 முதல்‌ 8 ஆம்‌ வகுப்பு
பிரிவு 2 : 9 மற்றும்‌ 10 ஆம்‌ வகுப்பு
பிரிவு3 : 11 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு


இந்த மூன்று பிரிவில்‌ நடைபெறும்‌ போட்டிகள்‌ பள்ளி நிலையில்‌ தொடங்கி, அடுத்தடுத்த நிலைகளான வட்டார, வருவாய்‌ மாவட்ட மற்றும்‌ மாநில அளவிலான நிலைகளில்‌ நடைபெற்று வருகின்றன‌.




பள்ளி அளவில்‌ நடத்தப்பெறும்‌ போட்டிகளில்‌ முதல்‌ தகுதி பெறும்‌ ஒருவர்‌ / ஒரு குழு மட்டுமே வட்டார அளவில்‌ நடைபெறும்‌ போட்டியில்‌ பங்கு பெறத் தருதி பெறுவர்‌. அதேபோல வட்டார அளவில்‌ நடைபெறும்‌ போட்டிகளில்‌ முதல்‌ இரு தகுதிகளை பெறும்‌ தனிநபர்‌ / குழுக்கள்‌ மட்டுமே மாவட்ட அளவிலான போட்டிகளில்‌ பங்கேற்பர்‌.


அதைத் தொடர்ந்து மாவட்ட அளவில்‌ நடைபெபெறும்‌ போட்டிகளில்‌ முதல்‌ தகுதியை பெறும்‌ தனிநபர்‌ / குழு மாநில அளவில்‌ நடைபெறும்‌ போட்டிகளில்‌ பங்கேற்க உள்ளனர்‌.


இந்த நிலையில் பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. குறிப்பாக நடனம், கவின் கலைகள், மொழித்திறன், நாடகம், சிற்பம், புகைப்படம் எடுத்தல், கட்டுரை, கவிதை, காண் கலைகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபெற்று வருகின்றனர். 






இந்த நிலையில் மாநிலம் முழுவதும் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களின் விவரம் வெளியாகி உள்ளது.


இதன்படி, 


பள்ளிக் கல்வித் துறை சார்பில்  நடத்தப்படும் அரசுப் பள்ளி மாணவர்கள் 16 லட்சம் பேர் கலைத் திருவிழாவில் கலந்துகொண்டுள்ளனர். இதில், 22,65,841 முறை கலைத் திருவிழாவுக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் 80,798 பேர் பங்குபெற்றுள்ளனர். 


நகராட்சிப் பள்ளி மாணவர்கள் 88,498 பேரும் ஆதி திராவிட நலப்பள்ளிகளைச் சேர்ந்த 29,546 மாணவர்களும் ஆர்வத்துடன் கலைத் திருவிழாவில் பங்குபெற்று, தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். 




இவர்கள் தவிர்த்து வனத்துறை பள்ளிகளில் இருந்து 1,821 மாணவர்களும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை பள்ளிகளில் இருந்து 527 மாணவர்களும் கலந்துகொள்கின்றனர். 


கல்லார் பிசி/ எம்பிசி துறைப் பள்ளிகளில் இருந்து 9,540 மாணவர்களும் பழங்குடியினர் நலப்பள்ளி மாணவர்கள் 10,537 பேரும் கலைத் திருவிழாவில் கலந்துகொள்ள முன்பதிவு செய்து, பங்கு பெற்றுள்ளனர். 


சமூக பாதுகாப்பு துறைப் பள்ளியில் இருந்து 176 பேரும் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா (KGBV) பள்ளியில் இருந்து 5696 மாணவர்களும் கலைத் திருவிழாவில் கலந்துகொண்டுள்ளனர். அதேபோல உறைவிடப் பள்ளிகளில் இருந்து 769 மாணவர்கள் கலைத் திருவிழா சார்பில் நடத்தப்படும் பல்வேறு போட்டிகளில் பங்கு பெறுகின்றனர். மொத்தத்தில் 24,94,199 முறை மாணவர்கள் கலைத் திருவிழாவில் பங்குபெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.