தமிழ்நாட்டில் பிரச்னையை கிளப்பிய நடத்துநர் மற்றும் காவலர் சமரசமாகினர். இருவரும் டீ குடித்து, கட்டிப்பிடித்து சமரசம் செய்து கொண்டனர்.
காவலர் - நடத்துநர் பிரச்னை:
கடந்த சில நாட்களுக்கு முன்பு நாங்குநேரி பகுதியில், காவலர் ஒருவர் டிக்கெட் எடுக்காமல் சென்ற வீடியோ வைரலாக பரவியது. இந்தநிலையில் போக்குவரத்து போலீசார் விதிகளை மீறும் அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கும் பணியை துவங்கினர்.
நாகர்கோவிலில் இருந்து நெல்லை - நாங்குநேரி வழியாக தூத்துக்குடிக்கு அரசு பேருந்தில் காவல்துறை டிக்கெட் எடுக்க தேவையில்லை என காவலர் மறுத்ததாகவும், அரசு பேருந்தில் அரசு பணியில் உள்ளவர்கள் பணி நிமிர்த்தமாக பயணிக்கும் போது டிக்கெட் எடுக்க தேவையில்லை எனவும் காவலர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது, நான் டிக்கெட் எடுக்க மாட்டேன் என காவலர் கூறியுள்ளார்.
அரசு பேருந்தில் காவலர்கள் பயணிக்க வாரண்ட் வேண்டும், வாரண்ட் இல்லாமல் பயணித்தால் டிக்கெட் எடுக்க வேண்டும் என நடத்துனர் எடுத்துக் கூறியிருக்கிறார். இதையடுத்து, பேருந்து அங்கிருந்து செல்லாமல் நின்று கொண்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் பயணிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் காவலர் டிக்கெட் எடுக்க ஒப்புக்கொண்டதை தொடர்ந்து பேருந்து அங்கிருந்து சென்றது.
"பழிக்கு பழி"
இந்தநிலையில், இது தொடர்பான வீடியோவை எடுத்த நடத்துனர் சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் காவலர்கள் விதிகளை மீறும் அரசு பேருந்துகள் மீது, அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட ஆரம்பித்தனர். சீட் பெல்ட் அணியாதது, அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்துவது, நோ பார்க்கிங் இடங்களில் பேருந்தை நிறுத்திய காரணத்திற்காக, காவல்துறையினரால் அபராதம் விதிக்கப்பட்டது. இச்சம்பவமானது, தமிழ்நாட்டில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இரு அரசு அங்கத்தினரே, தங்களுக்குள்ளே மோதும் போக்கிற்கு தமிழ்நாடு முழுவதும் பெரிது எதிர்ப்பலைகள் எழ ஆரம்பித்தது. பொதுமக்கள் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து, அரசு தலையிட்டு பிரச்னையை சரிசெய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
இதையடுத்து, போக்குவரத்து காவலர்கள் அரசு பேருந்து மீது அபராதம் விதித்து சம்பவமானது, பழிக்கு பழி சம்பவமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்தது.
சமரசம்:
இந்நிலையில், தமிழ்நாட்டில் பிரச்னையை கிளப்பிய இருவரும் இன்று சென்னைக்கு அழைக்கப்பட்டனர். இதையடுத்து நடத்துநர் மற்றும் காவலர் ஆகிய இருவரும் சமரசமாகினர். இருவரும் டீ குடித்து, கட்டிப்பிடித்து நட்பு பாராட்டிக் கொண்டனர்.
இதையடுத்து சமரசம் ஏற்பட்டதாகவும், அரசு போக்குவரத்து துறையினர் மீது விதிக்கப்பட்ட அபராதமானது, வாபஸ் பெறப்படுவதாக போக்குவரத்து காவலர் சார்பில் விதிக்கப்பட்டது.