காஞ்சிபுரம் என்றாலே கோயில் நகரம் ( Kanchipuram Temple City ) தான். தொடர்ந்து நாம் Travel With Abp தொடரின் ஒரு பகுதியாக காஞ்சிபுரத்தில் இருக்கும் கோயில்கள் குறித்து, பார்த்து வருகிறோம். காஞ்சிபுரத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய புகழ்பெற்ற 5 கோயில்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்க உள்ளோம்


Top 5 Temples in kanchipuram: காஞ்சிபுரத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 முக்கிய கோயில்கள்


காஞ்சிபுரம் மாநகரில் நூற்றுக்கணக்கான கோயில்கள் உள்ளன. பல்வேறு புராதானமான கோயில்களும் உள்ளன. இவற்றில் வாழ்நாளில் கட்டாயமாக பார்க்க வேண்டிய 5 கோயில்கள்.


1.  கைலாசநாதர் கோயில் - காஞ்சிபுரம்
2.  வைகுண்ட பெருமாள் கோயில் - காஞ்சிபுரம்
3.   காஞ்சி காமாட்சி அம்மன் கோயில்
4.  ஏகாம்பரநாதர் கோயில் - காஞ்சிபுரம்
5   வரதராஜ பெருமாள் கோயில் - காஞ்சிபுரம்


காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் - KAILASANATHAR TEMPLE


பல்லவர்கள் கட்டிடக்கலையை ரசிக்க வேண்டும் என்றால், நிச்சயம் வர வேண்டிய இடம் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் தான். காஞ்சிபுரம் புத்தேரி தெருவில் இந்த அற்புதமான கலை கோயில் உள்ளது. இக்கோயில் காலை 8.30 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.


இந்தக்கோயில் கி.பி. 700 இல் இரண்டாம் நரசிம்ம வர்மனால் கட்டப்பட்டது. இந்தக் கோயிலில் தமிழ்நாட்டின் ஆரம்பகால சுவரோவியக் கலைப் படைப்புகள் உள்ளன. இக்கோயில் தென்திசை   கைலாயம் என அழைக்கப்படுகிறது. மிகவும் பிரம்மாண்டமாக அமைந்துள்ள நந்தியை இங்கு தரிசிக்கலாம். இங்கு இருக்கும் ஒவ்வொரு சிற்பமும் சிவபராக்ரமத்தின் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே வேறு எங்கும் இது போன்ற சிற்பங்களை எளிதில் காண முடியாது.  இக்கோயிலில் பெண் தெய்வ வழிபாடு குறிக்கும் வகையில்,  மூத்த தேவி சிலையும் உள்ளது.


வைகுண்ட பெருமாள்  கோயில், காஞ்சிபுரம்- VAIKUNTA PERUMAL TEMPLE


108  வைணவ திருத்தலங்களில்  ஒன்றாக வைகுண்ட ராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் திருப்பரமேச்சுர விண்ணகரம்  என அழைக்கப்படுகிறது. திருமங்கை ஆழ்வார் பாடப்பட்ட இத்தலம் காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இக்கோயில் காசி யாத்திரை செல்வோர் தங்கிச் செல்லும் மடமாக இருந்தது. கோயில் மூன்று அடுக்குகளாக பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. மாமல்லபுரம் போன்றே இக்கோயிலில் கவினுறு சிற்பங்கள், கோயில் உட்புறச் சுவற்றில் செதுக்கப்பட்டுள்ளது. கோயில் சிற்பங்களின் கொள்ளை அழகை ரசிக்க நிச்சயம் இங்கு சென்று வரலாம்.


காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் - KAMAKSHI AMMAN TEMPLE


மதுரைக்கு மீனாட்சி கோயில் என்றால், காஞ்சிபுரத்துக்கு காமாட்சி கோயில். காமாட்சி அம்பாள் இங்கே 4 கரங்களோடு பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருக்கிறாள். முன் இருக்கைகளில் கரும்பு வில்லினையும், மலர்க் கணைகளையும், மேல் இருகைகளில் பாசம் மற்றும் அங்குசத்தை ஏந்தி இருக்கிறாள்.


51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும், மகா சக்தி பீடங்களில் ஒன்றாகவும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில்  திகழ்கிறது. காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவன்  கோயில்களுக்கும் மையமாக இந்த திருக்கோயில் அமைந்துள்ளது. அதேபோன்று இக்கோயிலில் ஆழ்வார்களால் மகிமைப்படுத்தப்பட்ட விஷ்ணு  சிலையும் உள்ளது.  விஷ்ணு  நின்ற கோலம்,  அமர்ந்த கோலம் மற்றும்  பள்ளியறை கோலத்தில் காட்சியளிக்கிறார்.


ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம் - EKAMBARESWARAR TEMPLE


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், திருக்கச்சியேகம்பம் என அழைக்கப்படுகிறது. தேவாரம் பாடப்பட்ட கோயிலில் ஒன்றாக உள்ளது. பஞ்சபூத தலங்களில் நிலத்திற்கு உரிய  தலமாக உள்ளது. தலை விருட்சக மரமாக மா மரம் உள்ளது. இந்த மரம்  3000 ஆண்டுகள் பழமையானது,  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த  மரம் பட்டுப் போகவே தற்பொழுது அந்த மரத்திலிருந்து எடுக்கப்பட்ட, மரபணுவில் உருவாக்கப்பட்ட மாமரம் உள்ளது. இந்த மாமரத்தில் 5 வகையான சுவைகளில் மாம்பழம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.  


கோயில் சுமார்  1300 ஆண்டுகள் பழமையான கோயிலாக உள்ளது.  இக்கோயிலை பொறுத்த வரை பல  மன்னர்கள் ஆட்சி காலத்தில் தொடர்ந்து  அமைப்பு பணிகள் நடைபெற்று உள்ளது. கோயிலில் ஏராளமான கல்வெட்டு தொகுப்புகள் கிடைக்கின்றன. முன்னாள் இருக்கும் பெரிய ராஜகோபுரம் காண்பவர் கண்களை கவரும் வகையில் உள்ளது.


வரதராஜ பெருமாள் கோயில், காஞ்சிபுரம்-VARADARAJA PERUMAL TEMPLE


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் என அழைக்கப்படும் திருக்கச்சி கோயில் அத்தி வரதர் புகழ்பெற்ற கோயிலாக உள்ளது. ஸ்ரீரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய கோயிலுக்கு  அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாக உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒரு கோயிலாக இது உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோழர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றனர். தொடர்ந்து முதலாம் குலோத்துங்க சோழன், விக்ரமசோழன் ஆகியோர் திருப்பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். சோழர்களின் வீழ்ச்சிக்கு பிறகு விஜயநகர பேரரசு காலத்திலும் தொடர்ந்து பல்வேறு திருப்பணிகள் நடந்துள்ளன. இக்கோயிலில் வருடத்திற்கு 200 நாட்கள் வரை உற்சவம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.